விசா கிடைத்தது-லண்டன் கிளம்பினார் வைகோ
சென்னை: தமிழ் பேசும் எம்.பிக்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நேற்று மாலை லண்டன் கிளம்பினார்.
லண்டனில் உள்ள தமிழ் பேசும் எம்.பிக்கள் கூட்டமைப்பின் சார்பில், இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள வருமாறு வைகோவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து திங்கள்கிழமை லண்டன் செல்ல விசாவுக்கு விண்ணப்பித்தார் வைகோ. ஆனால் விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்று கூறி வைகோவுக்கு விசா மறுக்கப்பட்டது. இதையடுத்து தனது விமான டிக்கெட்டை வைகோ ரத்து செய்தார்.
இதைத் தொடர்ந்து லண்டன் கூட்டம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நடப்பதல்ல, வைகோ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் அல்ல என்று இங்கிலாந்து தூதரகத்திடம், கருத்தரங்க ஏற்பாட்டாளர்கள் விளக்கினர்.
இதைப் பரிசீலித்த இங்கிலாந்து தூதரகம் அதில் திருப்தி அடைந்து வைகோவுக்கு விசா வழங்கியது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை லண்டன் கிளம்பினார் வைகோ.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை துணைத் தூதரகம் உள்ளிட்ட சில சக்திகள், எனது லண்டன் பயணத்தைத் தடுத்து நிறுத்த முயற்சித்தன. நான் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதை அந்த சக்திகள் விரும்பவில்லை.
இங்கிலாந்து எம்.பிக்கள் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில் கலந்து கொள்ளத்தான் நான் அங்கு போகிறேன். அவர்களது அழைப்பின் பேரில்தான் போகிறேன்.
அதைத் தடுக்க சிலர் முயன்றனர். ஆனால் எனது நலம் விரும்பிகள் சிலர் விசா கிடைக்க வழி செய்தனர்.
இதேபோல, இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நார்வே அரசு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள நான் சென்றபோது அப்போதும் சில சக்திகள்
என்னைத் தடுக்க முயன்றன.
ஆனால் நார்வே தூதரின் தலையீட்டால் எனக்கு விசா கிடைத்தது. நானும் கூட்டத்தில் பங்கேற்றேன்.
நான் மதுரையிலிருந்து இன்று காலை (நேற்று) திரும்பினேன். அதற்கு முன்பே நான் இதைக் கூறியிருந்தால், எனது பயணத்தை தடுக்க மீண்டும் அந்த சக்திகள் முயன்றிருக்கும் என்றார் வைகோ.
நவம்பர் 30ம் தேதி வைகோ சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications