மிதக்கும் சென்னை..படகுகளில் வேளச்சேரி மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிஷா புயல் போயும், கன மழை விட்டும் கூட இன்னும் சென்னை புறநகர்ப் பகுதிகளின் பல இடங்களில் வெள்ளம் வடியாமல் உள்ளது. இதனால் படகுகளில் போக்குவரத்து நடந்து கொண்டிருக்கிறது. பல பகுதிகளில் மீட்புப் படையினர் உணவுப் பொட்டலங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர். இப்பகுதிகளில் வசிப்போர், காய்கறி, பால் உள்ளிட்டவை கிடைக்காமல் பெரும் அவதியில் மூழ்கியுள்ளனர்.

தமிழகத்தை வாட்டி எடுத்து விட்ட நிஷா புயல் அரபிக் கடலுக்குப் போய் விட்டது. ஆனால் அது ஏற்படுத்திய வடு இன்னும் மக்களிடமிருந்து மறையவில்லை.

தமிழக கடலோர மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மிகக் கொடுமையாக உள்ளது. குறிப்பாக சென்னை புறநகர்ப் பகுதிகள் பல இன்னும் நீரில் மிதந்து கொண்டிருக்கின்றன.

இங்கு பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை. மின்சாரம் அடியோடு இல்லை. பாம்புகள், பூரான்கள் என விஷ ஜந்துக்களுக்கு மத்தியி்ல் மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி வசிக்க நேரிட்டுள்ளது.

பெரும்பாலான மக்கள் வீடுகளைப் பூட்டி விட்டு உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

வெள்ளம் வடியாமல் உள்ளதால் இப்பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களை சுத்தமாக ஓட்ட முடியவில்லை. ஆட்டோக்களும் கூப்பிட்டால் வருவதில்லை. தண்ணீரில் தத்தளித்து நடந்துதான் எங்கும் போக வேண்டியுள்ளது.

ஆலப்பாக்கம் ஏரி உடைந்ததால் விருகம்பாக்கம், சின்மயா நகர், சுற்றுப்பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. தரை தளம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி இருந்தது.

இன்னும் இந்த பகுதியில் முற்றிலுமாக வெள்ளம் வடியவில்லை. வீடுகளுக்குள் சகதியும், தண்ணீரு மான கிடக்கிறது. வீடுகளில் இருந்த பொருட்கள் வீணாகி விட்டன. தேங்கி கிடக்கும் சேற்றை பாத்திரங்கள் மூலம் வாரி இறைக்கின்றார்கள்.

மடிப்பாக்கம் மகா மோசம்:

மடிப்பாக்கம் ராம் நகர், திருவான்மியூர் ராதா கிருஷ்ணன் நகர், சூளைமேடு, கோடம்பாக்கம், கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பு, கொடுங்கையூர், எம்.ஆர்.நகர், முத்தமிழ் நகர் பகுதிகளில் 4 அடி உயரத்துக்கு இன்னும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

குறிப்பாக மடிப்பாக்கம், ராம் நகர் உள்ளிட்ட பகுதிகள் கடல் நீரால் சூழப்பட்டது போல காணப்படுகிறது. வேளச்சேரியின் சில இடங்களிலும் இதே நிலைதான்.

செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால் கொடுங்கையூர் கால்வாய் நிரம்பி தண்ணீர் தெருக்கள் வழியாக செல்கிறது.

தியாகராயநகர், அபிபுல்லா ரோடு, வடக்கு உஸ் மான் ரோடுகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அம்பத்தூர் எஸ்டேட், முகப்பேர் கோல்டன் பிளாட் பகுதிகளிலும் தண்ணீர் வடியவில்லை.

தண்ணீர் தேங்கிய பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் தடை செய்யப் பட்டுள்ளது. அரும்பாக்கம், கோடம்பாக்கம், வேளச்சேரி துணை மின் நிலையங்களில் தண்ணீர் சூழ்ந்ததால் மின் சப்ளை அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது.

அரும்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, கலெக்டர் நகர், எம்.எம்.டி.ஏ. காலனி, மேத்தா நகர், ரங்கராஜபுரம், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும் பங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் தவிக்கிறது.

குடிக்க, குளிக்க சமையல் செய்ய போன்ற அன்றாட பணிகளுக்கு மின்சாரம் அத் தியாவசியமாகி விட்டது. மின்சாரம் இல்லாததால் பல வீடுகளில் ரொட்டி, பழம், ரெடிமேடு உணவுகளை வாங்கி சாப்பிடுகிறார்கள்.

மழை நீர் புகுந்ததால் வீடுகளில் வைத்திருந்த மீட்டர் பெட்டிகள் பழுதாகி உள்ளன. இன்னும் தண்ணீர் தேங்கி இருப்பதால் கேபிள் வயர்களையும் பழுது பார்க்க முடியவில்லை என்கிறார்கள் மின்சார வாரிய ஊழியர்கள்.

வீடுகளுக்குள் புகுந்து விடும் விஷப்பூச்சிகள், இருக்க கூட முடியாத படி வீடு களுக்குள் உருவாகி உள்ள நீரூற்றுகள். இதற்கிடையே மின்சாரமும் இல்லாத அவலம் ஒவ்வொரு நாளையும் வேதனையுடன் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

திருடர்கள் வேறு ஒரு பக்கம்...:

வீட்டை விட்டு வெளியே சென்றால் மிஞ்சிய பொருட்களையும் திருடி விடுவார்கள் என்ற பயத்தில் பலர் நிவா ரண முகாம்களுக்கு செல்ல மறுத்து விட்டனர்.

வண்ணாரப்பேட்டையி்ல இப்படித்தான் ஒரு பூட்டிய வீட்டில் திருடி விட்டனர்.

டி.பி.கே. கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகமதுஜாகீர். டெய்லராக வேலை பார்த்து வருகிறார். மழை பெய்ததால் இவரது வீட்டில் வெள்ளம் புகுந்தது. இதனால் உறவினர் வீட்டுக்கு சென்றார்.

நேற்று திரும்பி வந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார். கொள்ளையர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை, 4 வெள்ளி குத்து விளக்கை கொள்ளையடித்து சென்றனர்.

இன்னும் 10 ஆயிரத்துக்கும் மேற் பட்டவர்கள் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்படுகிறது. சமைக்க முடியாத படி வீடுகளில் உள்ளவர்களுக்கும் உணவு கொடுக்கிறார்கள்.

சாலைகளில் பெருக் கெடுத்து ஓடும் தண்ணீர், மழை தண்ணீரால் ரோடுகளில் ஏற்பட்ட அரிப்பு காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

படகுகளில் பயணம்:

வேளச்சேரி திருவள்ளுவர் நகர் பகுதி தெப்பக்குளம் போல காணப்படுகிறது. இங்கு தெர்மகோல் அட்டைகளை படகுகள் போல செய்து நீண்ட குச்சியை வைத்து தண்ணீரில் தள்ளித் தள்ளி மக்கள் போக்குவரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

சில இடங்களில் மரங்களை இணைத்து படகு போல செய்து அதை தங்களது தினசரி பயன்பாட்டுக்கு வைத்துள்ளனர்.

சில இடங்களில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களை மீட்க தீயணைப்புப் படையினர் ரப்பர் படகு, மரப் படகு உள்ளிட்ட விதம் விதமான படகுகளைப் பயன்படுத்தி மீட்டு வருகின்றனர்.

பல இடங்களில் படகுப் பயணம் கிட்டத்தட்ட பஸ் பயணம் போலவே மாறியுள்ளது.

கடைகளுக்கும், வெளியிடங்களுக்கும் போக காசு கொடுத்து படகுப் பயணத்தை மேற்கொள்ளும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ரப்பர் ட்யூப்களை சிலர் படகுகள் போல மாற்றி அதையும் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் தான் அதிக அளவிலான படகுகளைக் காண முடிகிறது. ராமாபுரம் பகுதியிலும் படகுப் பயணத்தை சர்வ சாதாரணமாக காண முடிகிறது.

சில இடங்களுக்கு தீயணைப்புத் துறையின் படகுகள் வருவதில்லை. இதனால் அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்து தவிப்பில் உள்ளனர்.

ரோட்டுக்கு வந்த ஏரி..:

பள்ளிக்கரணை ஏரி தண்ணீர் ரோட்டின் குறுக்கே பாய்வதால் வேளச்சேரியில் இருந்து தாம்பரம் செல்லும் பஸ்கள் மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

கோயம்பேட்டில் இருந்து வடபழனிக்கு பஸ் போக்கு வரத்து இன்னும் சீராக வில்லை, சூளைமேடு, வள்ளுவர் கோட்டம் வழியாக சுற்றுப் பாதையில் செல்கிறது. வடபழனியில் இருந்து போரூர் செல்லும் பஸ்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

போட்டுத் தாக்கும் பள்ளங்கள்..:

பல இடங்களில் ரோடுகளில் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. தட்டுத்தடுமாறி வாகனங்கள் செல்கிறது. இதனால் கடுமையான போக்கு வரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரத்துக்கு எங்கும் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். ஆட்டோவும் கிடைப்பதில்லை. ரோடுகள் பல்லாங்குழிகளாக மாறி விட்டதால் மெயின் ரோட்டை தவிர இதர பகுதிகளுக்கு வர ஆட்டோ டிரைவர்கள் தயங்குகிறார்கள். தைரிய மாக வருகிற ஆட்டோ டிரை வர்களும் இரண்டு அல்லது மூன்று மடங்கு கட்டணம் கேட்கிறார்கள்.

பால் பண்ணை மூடல்:

இதில் அம்பத்தூர் பால் பண்ணையில் நீர் புகுந்து விட்டதால் அதில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநகரின் பல பகுதிகளில் பால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்துதான் சென்னைக்கு தினமும் 2 லட்சம் விட்டர் பால் வினி யோகிக்கப்பட்டு வந்தது.

ஆனால் கொரட்டூர் ஏரி தண்ணீர் அம்பத்தூர் பால் பண்ணைக்குள் புகுந்ததில் இடுப்பளவுக்கு அங்கு தண் ணீர் நிற்கிறது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அம்பத்தூர் பால் பண்ணை மூடப்பட்டு விட்டது.

இதனால் அம்பத்தூர், ஆவடி, முகப்பேர், வேளச் சேரி, தி.நகர் பகுதிகளுக்கு பால் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டது.

4 நாட்கள் மக்கள் அவதிப் பட்டதால் மாற்று ஏற்பாடாக சோழிங்கநல்லூர், மாதவரம் பால் பண்ணையில் இருந்து பாலை வரவழைக்க அதிகாரி கள் ஏற்பாடு செய்தனர்.

ஆனாலும் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் வடியாததால் மக்களுக்கு பால் சப்ளை செய்ய முடியவில்லை. லாரிகளில் பால் பாக்கெட்டு களை கொண்டு வந்தாலும் வீதிகளில் இறக்க முடியவில்லை.

கோயம்பேடு, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி, ஆஷாத்நகர், முகப்பேர், அயனம்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், அபிபுல்லா சாலை, கோடம்பாக்கம், வடபழனி, மதுரவாயல், ஆலப்பாக்கம் போன்ற பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியாததால் அங்குள்ள மக்கள் பால் கிடைக்ககாமல் அவதிப்படுகின்றனர்.

கடந்த 4 நாட்களாக பால் போடுபவர்கள் சைக்கிளில் வீடுவீடாக கொண்டு செல்ல முடியாத அளவுக்கு வீதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

இதனால் பொதுமக்கள் கடைகளுக்கு சென்று பால் பாக்கெட் வாங்க காத்து நிற்கிறார்கள்.

தண்ணீர் வடியாத பகுதி களில் உள்ள மக்கள் பால் வாங்க கடை கடையாக அலைந்தது பரிதாபமாக உள்ளது.

2,000 மீனவர்கள் சாலை மறியல்:

இந்த நிலையில், கடும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடைபெறாததால் ஆவேசம் அடைந்த மீனவர்கள் 2 ஆயிரம் பேர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மரக்காணம் அருகே உள்ள புதுக்குப்பம், காளியாங்குப்பம், கூனிமேடு, சென்னியாங்குப்பம், அத்திக்குப்பம் போன்ற மீனவ கிராமங்களில் மின்சாரம், குடி நீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களில் முறையான நிவாரணப் பணிகள் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அப் பகுதி மீனவ மக்கள் மறியல் நடத்தியும் அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால் ஆவேம் அடைந்த மீனவ மக்கள் சுமார் 2 ஆயிரம் பேர் இன்று காலை அனுமந்தை பஸ் நிலையம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது.

தகவல் அறிந்த மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர் கலியமூர்த்தி, கோட்ட குப்பம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் நடத்திவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+