Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஐஐடி இயக்குநர் ஆனந்த் நியமனம் செல்லாது - உயர்நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஐஐடி இயக்குநராக எம்.எஸ்.ஆனந்த் நியமிக்கப்பட்டது செல்லாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் அந்த நியமனத்தையும் ரத்து செய்துள்ளது. இதனால் பொன் விழா கொண்டாட்ட உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் ஐஐடி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆனந்த்துக்கு தற்போது 62 வயதாகிறது. ஆனால் 57 வயதுக்கு மேல் யாரையும் இயக்குநர் பதவியில் அமர்த்த முடியாது என்று ஐஐடி சட்ட விதிமுறை கூறுகிறது. இதை மீறி ஆனந்த் நியமிக்கப்பட்டதாக கூறி சென்னை ஐஐடியின் பழைய மாணவரான டாக்டர் முரளிதரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 'குவோ வாரன்டோ' ரிட் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, இந்த அதிரடித் தீர்ப்பைப் பிறப்பித்துள்ளார். மேலும் மனுதாரருக்கு ரூ. 5000 அபராதத்தை ஆனந்த் அளிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக முரளிதரன் உச்சநீதிமன்றத்தில் ஒரு குவோ வாரன்டோ ரிட் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், பேராசிரியர் எம்.எஸ்.ஆனந்த், சென்னை ஐஐடியின் இயக்குநராக நியமிக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளன.

ஆனந்த்தின் முதல் பதவிக்காலம் 2006ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிந்து விட்டது. ஆனால் அவர் பதவியிலிருந்து விலகவில்லை.

இந்த நிலையில் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஆனந்த்தின் பதவிக்காலத்தை நீட்டித்து ஐஐடி பதிவாளர் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார். ஆனால் பதிவாளருக்கு இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பிக்க எந்த அதிகாரமும் கிடையாது.

மேலும், இந்த உத்தரவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலோ அல்லது ஐஐடி கவுன்சிலின் ஒப்புதலோ இல்லாததால், இந்த நியமனத்தை அங்கீகரிக்க ஐஐடி கவுன்சில் முன்வரவில்லை.

எனவே ஆனந்த் மீண்டும் இயக்குநராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த தனது மனுவை முரளிதரன் வாபஸ் பெற்றார். ஆனால் அதேபோன்ற மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆனந்த்துக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. ஆனால், செப்டம்பர் 22ம் தேதி முரளிதரனின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்தார் முரளிதரன். இந்த அப்பீல் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், முரளிதரனின் மனு விசாரணைக்குரியதே. அதை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் நீதிபதி சந்துருவுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து நீதிபதி சந்துரு முரளிதரனின் மனுவை விசாரித்தார். விசாரணையின் இறுதியில், நேற்று ஆனந்த் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அதிரடித் உத்தரவைப் பிறப்பித்தார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஐஐடி சட்டத்தின் 15(3)வது பிரிவு, இயக்குநர் நியமனத்தை ஐஐடி கவுன்சில் மட்டுமே செய்ய முடியும் என தெளிவாக கூறுகிறது. மேலும், நியமிக்கப்படும் இயக்குநர் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை, இதில் எது முதலில் வருகிறதோ, அது வரை மட்டுமே நீடிக்க முடியும் எனவும் விதி கூறுகிறது.

ஆனந்த் வழக்கில், அவரது பதவிக்காலம் 2006ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிந்து விட்டது. அந்தக் கல்வியாண்டு முடியும் வரை அவர் பதவியில் தொடர முடியும்.

எனவே அதைத் தாண்டி ஆனந்த் இயக்குநர் பதவியில் நீடித்தது விதிமுறை மீறலாகும். மேலும், அவரது பதவிக்காலத்தை நீட்டித்தது தொடர்பான நடைமுறைகள் அனைத்தும் சட்ட விரோதமானதாகும்.

மேலும் ஆனந்த் நியமனம் குறித்து ஐஐடி கவுன்சில் இதுவரை அறியாமுலம், அங்கீகரிக்காமலும் உள்ளது. இந்த நிலையி்ல் அவர் எப்படி இப்பதவியில் நீடிக்கிறார் என்று புரியவில்லை.

ஐஐடி நிறுவனம் அரசால் உருவாக்கப்பட்டது என்றாலும் கூட, இயக்குநர் நியமனம் தொடர்பாக ஒரு அறிவிக்கை கூட வெளியிடப்படாதது ஆச்சரியமாக உள்ளது. இது அரசியல் சட்டத்தின் 14 மற்றும் 16வது பிரிவுகளை மீறும் செயலாகும்.

மேலும், இதுதொடர்பாக மத்திய மனித வளத்துறைக்கு கூடுதல் அதிகாரம் இருப்பதாக கூறுவது திருப்தி அளிக்கும் வகையில் இல்லை.

எனவே, மனுதாரரின் வாதங்களை வைத்துப் பார்க்கும்போது, இந்தப் பதவி ஆனந்த்துக்காக ரிசர்வ் செய்து வைக்கப்பட்டது போலத் தெரிகிறது. மேலும், தனது பதவி நீட்டிப்பு குறித்து ஆனந்த்துக்கு முன்பே தெரிந்திருக்கும் எனவும் ஊகிக்க வாய்ப்புகள் உள்ளன.

எனவே இந்த நியமனத்தை செல்லாது என்று அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார் நீதிபதி சந்துரு.

ஐஐடி சென்னை பொன் விழாக் கொண்டாட்டங்களில் மும்முரமாக உள்ளது. இந்த நிலையில் ஆனந்த் நியமனம் செல்லாது என உத்தரவு வந்திருப்பதால் ஐஐடி வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆனந்த் கூறுகையில், எனது கைக்கு உத்தரவு வரவில்லை. எனவே கருத்து தெரிவிக்க இயலாது. கோர்ட் உத்தரவிட்டால் நான் இயக்குநர் பதவியில் நீடிக்க மாட்டேன். வேறு மாதிரியான தீர்ப்பு வந்தால் பதவியில் நீடிப்பேன் என்றார்.

தற்போதைய தீர்ப்பை விடுமுறைக் கால கோர்ட் அளித்துள்ள தீர்ப்பு என்பதால், ஆனந்த் இதை எதிர்த்து அப்பீல் செய்ய முடியும். இருப்பினும் ஜனவரி 5ம் தேதிக்குப் பின்னர்தான் அப்பீல் செய்ய முடியும். எனவே அதுவரை ஆனந்த் விடுமுறையில் செல்வார் என தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+