சொட்டு மருந்து-மனசாட்சி இல்லா அரசியல்வாதிகள்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற வெறி தலைக்கேறி குழந்தைகளுக்கு தரப்பட்ட போலியோ சொட்டு மருந்தில்கூட விஷத்தை கலந்திட நினைக்கும் விபரீத அரசியல்வாதிகளுக்கு மனசாட்சி என்ற ஒன்று உண்டா? என்பதை மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: மின்னணு ஆளுமையில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்வதாக செய்தி வெளிவந்துள்ளதே?.

பதில்: மக்களுக்குத் தேவையான சேவைகளை வேகமாக வழங்குவதிலும், கிராமப்புற மக்களை சென்றடையும் முயற்சிகளிலும், வணிக சேவைகளை வழங்குவதிலும், கம்ப்யூட்டர்களை பயன்படுத்துவதில் தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்கிறதென்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவருவதாக ஐ.டி.சி. டேட்டா க்வெஸ்ட் தொழில்நுட்ப இதழ் அறிவித்துள்ளது.

இன்று தமிழகம் மின்னணு ஆளுமையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் திகழ்கிறதென்றால், அதற்கான அடிப்படை முயற்சிகள் அனைத்தும் 1996-2001ம் ஆண்டு காலகட்டத்தில் திமுக ஆட்சியில் அன்றைய மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் முனைப்பான முயற்சிகளால் மேற்கொள்ளப்பட்டன என்பதை கம்ப்யூட்டர் துறையை சேர்ந்தவர்கள் அனைவரும் அறிவார்கள்.

அப்போதுதான் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தனியே கொள்கையும்; ஆப்டிக் பைபர் கேபிள் பதித்திட தனிக் கொள்கையும் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதலாவதாக மிகப்பெரிய கம்ப்யூட்டர் கல்வித் திட்டம் அறிவித்து செயல்படுத்தியதும் தமிழகம்தான்.

மாநிலம் முழுவதும் 1,200 மேல்நிலைப் பள்ளிகளிலும், 11 மற்றும் 12ம் வகுப்புகளில் கம்ப்யூட்டரை விருப்பப் பாடமாக வழங்கும் திட்டம் ரூ. 187.66 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டது.

தகவல் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்த டானிடெக்', தரமணி டைடல் பூங்கா, சிறுசேரி தொழிற் பூங்கா போன்றவை தொடங்கப்பட்டதும் அப்போதுதான்.

கேள்வி: கசப்பான இலவச பொங்கல்' என்று தலைப்பிட்டு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில பத்திரிகையில் தலையங்கம் எழுதியிருக்கிறார்களே?

பதில்: தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் சிறப்பாகவும், இனிப்பாகவும் கொண்டாடுவதற்காக சர்க்கரை பொங்கல் தயார் செய்வதற்கு தேவையான பச்சரிசி, வெல்லம், பாசிப் பருப்பு, முந்திரி-திராட்சை- ஏலக்காய் ஆகிய பொருட்கள் வாழ்த்துடன் கூடிய ஒரு தனி பையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளின் மூலம் எல்லாக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை கேலியும், கிண்டலும் செய்து தலையங்கம் எழுதியிருக்கிறார்கள்.

அது மட்டுமா? வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் இலவசமாக வழங்குவதையும், அண்மையில் புயல்- பெருமழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2,000 வீதம் நிவாரண உதவிகள் வழங்குவதையும் கூட கேலி செய்திருக்கிறார்கள். நிதி உதவியையோ, இலவசமாக பொருட்களையோ வழங்குவது மக்களாட்சி அம்சங்களுக்கு எதிரானது என்றும் ஒவ்வொருவருக்கும் சம வேலைவாய்ப்பு கிடைத்து, வருவாய் பெறுவதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

திமுக எம்பி கனிமொழியின் முயற்சியால், சில மாவட்டங்களில் அவர் முன்னின்று நடத்திய வேலைவாய்ப்பு முகாம்கள் வாயிலாக, 50,00 0பேருக்கு வேலை கிடைத்திருப்பதை, இந்து' இதழ்கூட பாராட்டி எழுதியுள்ளது.

மேலும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இரண்டரை ஆண்டு காலத்தில் ரூ. 31,000 கோடி ரூபாய் முதலீட்டில் 22 பெரிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு; அவற்றில் 7 தொழிற்சாலைகள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டதால், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் இதுவரை கிடைத்துள்ளன.

ஆனால், வேலை செய்வதற்கு தகுதியானவர்களின் எண்ணிக்கை அதிகமாகி, வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை குறைந்திருக்கும் இந்தியாவை போன்ற மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் அந்த மக்கள் தொகையில் சரிபாதிக்குமேல் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் நிலைமை உள்ள இந்திய நாட்டில் அரசே முன்வந்து வாழ்வதற்கு தேவையான நிதிஉதவி வழங்குவதும், இலவசமாகப் பொருள்களை தருவதும் தவிர்க்க முடியாதவை மட்டுமல்லாமல், மக்களுக்குத் தேவையானவையும் ஆகும்.

இலவசமாகப் பொருள்களைத் தருவது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும் நடைபெறுவதைப்போல கருதுவதும், எழுதுவதும் வருந்தத்தக்கது. மற்ற பல மாநிலங்களிலும், வேறு சில நாடுகளிலும் இவை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அப்படி இருக்கும்போது, ஏழை எளிய மக்களுக்கு சர்க்கரை பொங்கலுக்கான பொருள்களை இலவசமாக தருவது, இவர்களது கண்களை மட்டும் ஏன் உறுத்துகிறது? என்பதற்கான காரணத்தை தமிழகத்து மக்கள் நன்கு அறிவார்கள்.

ஆம்; சங்கராந்திப் பண்டிகை என்பது தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் திருநாளாக மாறியதை இவர்கள் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே முதல் காரணமாகும்.

கேள்வி: நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் டாக்டர் அமர்த்தியா சென் இட ஒதுக்கீட்டு கொள்கையை வரவேற்றுப் பேசியிருக்கிறாரே?.

பதில்: பல நூற்றாண்டுகளாக அழுத்தப்பட்டு, வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்துள்ள மக்கள் மேம்பாட்டு அடைவதற்காகத்தான் இடஒதுக்கீடு என்று சென்னை ஐ.ஐ.டியில் நடைபெற்ற ஒரு விழாவில் டாக்டர் அமர்த்தியா சென் விளக்கமாகப் பேசியிருக்கிறார். தகுதி, திறமை போன்ற பிரச்சினைகளை சமத்துவ சமுதாயம் என்ற கோணத்தில் இருந்து அணுக வேண்டும் என்றும்; பின்தங்கிய பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கும் கொள்கை அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பின்பற்றப்படுகிறது என்றும்; நியாயம் என்பதையும், நீதி என்பதையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் என்றும் டாக்டர் அமர்த்தியா சென் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

தமிழகத்தில் திராவிட இயக்கத்தால் 90 ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பப்பட்ட சமூகநீதி முழக்கம், இன்றைக்கு உலக அளவில் எதிரொலிப்பது கேட்டு உள்ளபடியே மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம்.

கேள்வி: 21-12-2008 அன்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் பெற்றோர்கள் மத்தியில் பதற்றமும், கலவரச் சூழ்நிலையும் நிலவியதற்கு என்ன காரணம்?

பதில்: இந்தியா முழுவதும் போலியோ நோயை ஒழிக்க சிறப்பு முகாம்கள் அமைத்து, 5 வயதிற்கு உள்பட்ட சுமார் 18 கோடி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டிருந்ததை ஒட்டி தமிழ்நாட்டில் 40,399 மையங்களில் சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுமார் 11 மணியளவில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு குழந்தை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதால், இறந்து போனதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு பொய் செய்தியைப் பரப்பியது. அதன் தொடர்ச்சியாக உருவான யூகங்களும், வதந்திகளும் மக்களை திசை திருப்பி, பீதியையும், குழப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தின.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப் போன்ற சர்வதேச குழந்தைகள் நல நிறுவனங்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், எண்ணற்ற மருத்துவ அறிவியல் அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் போலியோ சொட்டு மருந்தினால் எவ்விதமான பாதிப்புகளும் வராது என்று உறுதிப்படுத்தி இருக்கின்றனர். போலியோ சொட்டு மருந்து என்பது; குழந்தைகள் நலனுக்கு அடிப்படையான மிகச்சிறந்த மருந்தாகும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எப்படியாவது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற வெறி தலைக்கேறி குழந்தைகளுக்கு மிகவும் தேவையான போலியோ சொட்டு மருந்தில்கூட விஷத்தை கலந்திட நினைக்கும் விபரீத அரசியல்வாதிகளுக்கு மனசாட்சி என்ற ஒன்று உண்டா? என்பதை மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+