அதிமுக கூட்டணிக்கு தங்கபாலு-இளங்கோவன் திட்டம்-திருமா
நாகர்கோவில்: வரும நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர தங்கபாலுவும், இளங்கோவனும் திட்டமிட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
குமரி மாவட்டம் அருமனையில் கிருஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
அ.தி.மு.க. கூட்டணி திருமங்கலம் தொகுதியில் திமுகவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் முழு ஆதரவு அளிக்கும். இந்தத் தேர்தலில் திமுக நிச்சயம் வெல்லும்.
சத்தியமூர்த்தி பவன் மீதான தாக்குதல் திட்டமிட்ட செயல் அல்ல. அது எதிர்பாராமல் நடந்த நிகழ்வு. இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு விளக்கக் கடிதம் எழுதியிருக்கிறேன். தமிழக முதல்வரை சந்தித்தும் விளக்கமளித்துள்ளேன்.
ஆனால் தமிழக காங்கிரசார் இதை பெரிதுபடுத்தி வருகின்றனர். தங்கபாலுவும், இளங்கோவனும் அதிமுக கூட்டணியில் சேர விரும்புகிறார்கள். அதற்காக எடுக்கப்பட்ட அரசியல்ரீதியான நடவடிக்கைகள்தான் விடுதலைச் சிறுத்தைகளுடனான மோதல்.
தமிழ் ஈழம் அமைய உலக அளவில் ஆதரவு திரட்டும் மாநாடு வரும் 26ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் இளஞ்சிறுத்தைகள் பாசறையின் தொடக்க விழாவும் நடைபெறும் என்றார் திருமாவளவன்.
மாநாட்டுக்கு நிபந்தனையுடன் போலீஸ் அனுமதி:
இந் நிலையில் விடுதலைச் சிறுத்தைகளின் மாநாட்டுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நிபந்தனை அடிப்படையில் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக மாநாட்டில் கருத்துகள் எதுவும் தெரிவிக்க கூடாது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக விளம்பர பேனர்கள் எதுவும் வைக்கக்கூடாது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர்களின் பேனர்களை வைக்கக்கூடாது என்றும் போலீசார் நிபந்தனை விதித்துள்ளனர்.
அண்ணாநகர் உதவி கமிஷனரிடம் விடுதலைச் சிறுத்தை இயக்கத்தினர் இது தொடர்பாக உறுதிமொழி கடிதம் ஒன்றையும் எழுதி கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
அனுமதியை ரத்து செய்ய காங். கோரிக்கை:
இதற்கிடையே சிறுத்தைகள் மாநாட்டுக்கு அனுமதி தரக் கூடாது என்று கூறி காங்கிரஸ் எம்எல்ஏ போளூர் வரதன், சென்னை நகர முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் தலைமையில், ஏராளமான காங்கிரசார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
இது குறித்து வரதந் கூறுகையில், இந்த மாநாடு நடத்துவதற்கு நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இருந்தாலும் இந்த மாநாடு நடந்தால் சட்டம்-ஒழுங்கு கெடும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும். எனவே இந்த மாநாடு நடத்துவதற்கு அனுமதி மறுக்க வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தினர் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள். எந்த நிபந்தனை விதித்தாலும் அதை ஏற்று அவர்கள் நடக்கமாட்டார்கள்.
விடுதலைச் சிறுத்தைகள் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இல்லை. அவர்கள் திமுகவோடுதான் கூட்டணி வைத்திருக்கிறார்கள். நாங்களும் திமுகவோடு மட்டுமே கூட்டணி வைத்துள்ளோம்.
விடுதலைச் சிறுத்தைகளை திமுக கூட்டணியில் வைத்துக் கொள்வது குறித்து முதல்வர்தான் முடிவு செய்ய வேண்டும். அன்னை சோனியாவின் கட்டளையை ஏற்று நாங்கள் செயல்படுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications