மதுரை: வாக்கு எண்ணப்பட்ட பின் பொங்கல் பொருட்கள்
சென்னை: திருமங்கலம் இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு மதுரை மாவட்டம் முழுவதும் பொங்கல் இலவச பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
தமிழ் புத்தாண்டான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் வைப்பதற்கான பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கும் திட்டத்தையும், ஏழைகளுக்கு பொங்கல் இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்து பேசியதாவது:
மதுரை மாநகருக்குப் பக்கத்திலே, திருமங்கலத்திலே நடைபெறும் தேர்தலையொட்டி, அங்கே பொங்கலுக்கான இலவசப் பொருட்களை வழங்கக் கூடாது, இடையிலே தேர்தல் நடக்கவிருக்கிறது, அது முரணாக ஆகிவிடும், விதிக்கு மாறாக ஆகிவிடும் என்று தேர்தல் அதிகாரிகள் சொன்னார்கள்.
அதனால் இரண்டு, மூன்று நாட்கள் தாமதமாக, 9ம் தேதி மதுரையிலே தேர்தல் என்றால் வாக்குகள் எண்ணி முடியும் வரை காத்திருந்து, எண்ணி முடித்த பிறகு மதுரை மாவட்டத்திற்கும், திருமங்கலம் தொகுதிக்கும் வழங்குவோம்.
தமிழ்ப் புத்தாண்டு என்று கூறி, பொங்கல் நாள்தான் தமிழர்களுக்கு புத்தாண்டு என்பதை நினைவுறுத்தி, அதனை சட்டமாகவும் ஆக்குவதற்கு காரணகர்த்தாக்களாக இருந்த தமிழ் பேரறிஞர்கள் அனைவருக்கும் இந்த விழாவிலே நான் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
1921, 1931ம் ஆண்டுகளில் தமிழகத்திலே உள்ள பெரும் புலவர்கள் எல்லாம் ஒரு இடத்திலே கூடி, மறைமலை அடிகளாரின் தலைமையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.
பல புலவர்களுடைய ஆய்வுக்கு பிறகு, அந்த பேரறிஞர்களின் கண்டுபிடிப்பாக, நமக்கு தை முதல்நாள் தான் தமிழர்களுக்கு ஆண்டு பிறப்பு நாள், வேறு நாட்கள் எல்லாம் வரலாம், போகலாம்.
ஏழை உழவர்கள், பாடுபடும் மக்களுக்கு அந்த பாடுபட்ட உழைப்புக்கு பலன் கிடைப்பது தை முதல்நாள் தான், அதனால் தான் தை பிறந்தால் வழிபிறக்கும்'.
வருத்தப்படாமல் இருங்கள், தை பிறந்தால் உனக்கு வழிபிறக்கும்' என்று சொல்வதற்கு காரணமே, தை பிறந்தால் தான் வீட்டிலே ஒரு நல்ல நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஏற்ற செலவுக்கு தேவையான பணம் கூட கிடைக்கும்.
ஆகவே தை பிறந்தால் வழிபிறக்கும் என்று சொல்கின்ற இந்த பழமொழி நீண்ட நெடுங் காலத்திற்கு முன்பே உருவாகி, இடையிலே மறந்து போய், இடையிலே அதன் பொருள் விளங்காமல், தை பிறப்பது என்பது, பொங்கல் நாள் பிறப்பது என்பதல்ல, சங்கராந்தியின் விஜயம் என்றும்,
பஞ்சாங்கத்தை எடுத்து புரட்டிப் பார்த்தால், அதனுடைய முதல் பக்கத்திலோ, அல்லது மூன்றாம் பக்கத்திலோ, அல்லது இறுதி பக்கத்திலோ ஒரு பயங்கரமான பெண் உருவத்தை போட்டு, அந்த பெண் உருவமும் ஒரு கை, இரண்டு கையோடு இருக்காது, பத்து கைகளோடு விளங்கி, அந்த பெண் உருவத்தின் பல்லும், சாதாரணமாக முல்லை பல்லாகவோ, மல்லிகை பல்லாகவோ இல்லாமல், அந்தப் பல்லும் கோரப் பற்களாக இருந்து இந்த மகர சங்கராந்தி, இன்ன தேதியில், இன்ன லக்கனத்தில் வருகிறாள்.
எதிலே ஏறிக் கொண்டு வருகிறாள் என்றால், கழுதையில் ஏறிக்கொண்டு வருகிறாள். அல்லது கோவேறு கழுதையில் ஏறிக்கொள்கிறாள். அல்லது புலியின் மீது ஏறிக்கொண்டு வருகிறாள், அல்லது யானை மீது ஏறிக்கொண்டு வருகிறாள்.
அந்த மகர சங்கராந்தியின் பலன் எப்படி இருக்கும் என்றால், நாட்டில் மழை பொழியும் அல்லது பொழியாது. நாட்டில் பஞ்சம் வரும் அல்லது வராது என்ற இரண்டு மாறுபாடான ஜோதிடங்களை உள்ளடக்கியதாக மகரசங்கராந்தி வருவாள்.
இந்த மகரசங்கராந்தி என்பது தமிழர் ஏற்றுக் கொண்டதல்ல. நான் தமிழர் என்று சொல்வதற்கு காரணம், நான் இன்றைய தமிழர்களை சொல்லவில்லை. அன்றைய தமிழர்கள் யாரும் மகர சங்கராந்தியை ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல.
ஆனால், இடையிலே வந்த தமிழர்கள் அதை ஏற்றுக்கொள்ள கூடிய அளவுக்கு, இடையிலே வந்தவர்கள் அதற்கான புராணங்களை ஜோடித்து, அதற்கான கதைகளை அளந்து, அதை நம்பச் செய்து, அதற்கு கடவுள் என்ற கற்பனையைத்தந்து அதனை ஏற்றுக்கொள்ள வைத்தார்கள்.
அதற்கு மறைமலை அடிகளார் போன்ற தமிழ் பெரியோர்கள், தந்தை பெரியாரைப் போன்ற சீர்திருத்த செம்மல்கள், அறிஞர் அண்ணாவைப் போன்ற அறிவியக்கவாதிகள் எல்லாம் தலையெடுத்து இன்றைக்கு மகர சங்கராந்தி மறைந்து பொங்கல் பூரிப்போடு எழுந்திருக்கின்றது.
அதற்காக நீங்கள் ஏற்கனவே கொண்டாடிக் கொண்டிருந்த மகர சங்கராந்தியை கொண்டாட வேண்டாம் என்று சொல்லவில்லை. அந்த நம்பிக்கை உள்ளவர்கள் கொண்டாடுங்கள். இதிலே நம்பிக்கை இல்லை என்று எண்ணுகின்றவர்கள், எங்களுக்கு தமிழின்பால் தான் அன்பு, தமிழின் மீது தான் பற்று, பாசம்.. நாங்கள் தமிழர்கள், ஆகவே தமிழர்களுடைய திருநாளை, தமிழர்களுடைய பண்டிகையை தமிழர்கள் முறைப்படி கொண்டாட வேண்டும் என்று எண்ணுகின்றவர்கள் பொங்கல் நாளை கொண்டாடுங்கள் என்று தான் கூற விரும்புகிறேன்.
அதைக் கொண்டாடியவர்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கட்டும். அதை கொண்டாடுகின்ற காரணத்தால் நீங்கள் இதை கொண்டாட வேண்டாமென்று சொல்லமாட்டேன். இதைக் கொண்டாடுகின்ற காரணத்தால் அதை கொண்டாட வேண்டாம் என்று நான் தடுத்திட மாட்டேன்.
அதே நேரத்திலே தமிழன் எதை கொண்டாட வேண்டும், எந்தத் திருநாளை கொண்டாட வேண்டாம் என்பதை சிந்தித்து செயல்படுங்கள் என்று கேட்டுக்கொள்ள எனக்கு கடமை இருக்கிறது. அதை சந்தித்து ஏற்றுக் கொள்கின்ற உரிமை உங்களுக்கு இருக்கிறது. ஆகவே கடமைக்கும் உரிமைக்கும் உள்ள அந்தப் பொருள்தனை உணர்ந்து தமிழர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இன்று இந்த விழாவில் பொங்கலை முன்னிட்டு சில சமையல் பொருட்கள், அரிசி உள்பட, சர்க்கரை உள்பட இலவசமாக வழங்கப்படுகிறது. இப்படி இலவசமாக வழங்குவதையே சிலர் கேலி செய்கின்ற நிலை நாட்டிலே ஏற்பட்டிருக்கிறது.
வழங்காவிட்டால் நீங்கள் மாத்திரம் உண்ணுகிறீர்கள், உற்சாகமாக இருக்கிறீர்கள், ஏழை எதுவும் இல்லாமல் பசியால், பட்டினியால் அல்லல் படுகிறானே, உங்களுக்கு கண் தெரியவில்லையே என்று கேட்கின்றவர்களும் நாட்டிலே உண்டு.
இலவசமாகக் கொடுத்தால், இப்படி எதையும் இலவசமாக கொடுத்தால் நாடு உருப்படுமா என்று கேட்கிறவர்களும் இருக்கின்றார்கள்.
அந்த பொருளாதார மேதைகளுக்கு சொல்லிக்கொள்கிறேன். எல்லோரும் பொருளாதாரத்தின் அடித்தளத்தை உணர்ந்து, பொருளாதாரத்தை எப்படி வளர்ப்பது என்ற ஆய்விலே வெற்றிபெற்று, ஒருசேர பொருளாதாரத்தை வளர்க்க தொடங்கினால் அப்போது வேண்டுமானால் இலவசத்தை வேண்டாம் என்று ஒவ்வொன்றுக்கும் விலை வைத்து, அதை விற்று, அதன் மூலம் வருகின்ற வரவு, அதனால் ஏற்படுகின்ற செலவு, ஆகியவற்றை கணக்கிடலாம்.
அதற்கிடையே நாம் செய்கிறோம் என்பதற்காக இலவசம் என்றாலே கிண்டல், இலவசம் என்று சொன்னாலே கேலி, இலவசம் என்று சொன்னாலே அதற்கு ஒரு கேலி சித்திரம், இலவசம் என்று சொன்னாலே, அதற்கு ஒரு ஏகடியத் தலையங்கம் எழுதுகின்ற பத்திரிகைகள் நாட்டிலே இருப்பதை நான் காணுகிறேன்.
இலவசம் என்றால் அதிலே என்ன கெடுதி?. அன்னதானம் செய்கிறார்களே, அது இலவசம் இல்லையா? மணிமேகலை அச்சய பாத்திரத்தை வைத்துக்கொண்டு, அதிலே அவ்வப்போது விளைகின்ற அன்னத்தை அகதிகளுக்கு, அனாதைகளுக்கு அளித்ததாகக் கவிதையாத்து, அதை காப்பியங்களிலே ஒன்றாக சேர்த்திருக்கிறோமே, அது இலவசம் அல்லவா?.
அவ்வளவு ஏன்? நாம் தருகின்ற இலவசங்களை கேலி செய்கின்ற பத்திரிகைகள், அவர்களே வாரம் ஒரு நாள், ஒரு பத்து பக்கங்கங்களை கொண்ட அந்த பத்திரிகை, வேறு 4 பக்கங்களை இணைத்து, இது இலவசம் என்று சொல்கிறார்களே, அது இலவசம் இல்லையா?.
இலவசத்தை இன்று கேலி செய்கின்றவர்கள் எல்லாம், இலை வசம் ஆனவர்கள்'. நாம் அதற்காக கவலைப்படவில்லை.
ஒரு சகோதரன் தந்தது என்று சகோதரிகளும், நம்முடைய பிள்ளை கொடுத்தது, நம்முடைய மகன் வாங்கி அளித்தது என்று தாய்மார்களும், எண்ணிக்கொண்டு இதைப் பெற்று கொள்கிறார்களே அல்லாமல் இலவசம், நாங்கள் எல்லாம் இரவலர்களாக ஆகி விட்டோம், ஆகவே இந்த அரங்கத்திலே இவைகளை எல்லாம் இலவசமாக பெறுகிறோம் என்ற எண்ணத்தோடு அல்ல.
உரிமையோடு தருகிறேன். உறவு மனப்பான்மையோடு தருகிறேன், என் அக்காள், தங்கைகளுக்கு தருகிறேன் சேலைகளை, அண்ணன், தம்பிகளுக்கு தருகிறேன் வேட்டிகளை என்ற அந்த உணர்வோடு தான் நான் தருகிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications