குணத்தால் தங்கம், கொதித்தால் சிங்கம்..வைகோ
சென்னை: எம்.ஜி.ஆர். நிறுவிய மக்கள் சக்தியான அதிமுகவை அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரும்பு கோட்டையாக கட்டிக்காத்து வருகிறார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காலத்தால் அழியாத புகழின் இமயமாக திகழும் எம்ஜிஆரின் பிறந்த நாளினை நெஞ்சால் போற்றி பொன்னாளாக, திருநாளாக கோடானுகோடி மக்கள் கொண்டாடும் நன்னாள் தான் ஜனவரி 17.
அண்ணாவின் எல்லையற்ற அன்புக்கும் மதிப்புக்கும் உரியவராக எம்ஜிஆர் விளங்கினார். குணத்தால் தங்கம், கொதித்தால் சிங்கம் என்று எம்.ஜி.ஆரை பாராட்டிய அண்ணா, 1967 பொதுத் தேர்தலில் பரங்கிமலை சட்டமன்ற தொகுதியில் தன்னுடைய இயக்கத்தின் வேட்பாளராக அறிவித்திருந்த நிலையில் எம்.ஜி.ஆர். குண்டு காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
தேர்தல் பிரசாரத்தில் அண்ணா பேசும்போது, துப்பாக்கி எத்தனையோ அக்கிரமங்களை செய்திருக்கலாம். ஆனால் எம்.ஜி.ஆரை கூட சுடத் துணியுமா என்று நினைத்தேன். துப்பாக்கி குண்டு எம்.ஜி.ஆரின் கழுத்தில் பாய்ந்தது. அது திசை மாறி சென்றது. தர்மம் தலைகாக்கும் என்பது மெய்யாயிற்று' என புகழ்ந்தார்.
ஈழத் தமிழர்க்கு உதவிய எம்ஜிஆர்...
ஈழத் தமிழர்களின் கண்ணீரை துடைக்க எம்.ஜி.ஆர். செய்திருக்கக் கூடிய மகத்தான செயல்கள் நன்றியுள்ள தமிழர்களின் மனங்களிலிருந்து என்றும் மறையாது.
எம்.ஜி.ஆர். நிறுவிய மக்கள் சக்தியான அரசியல் இயக்கத்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரும்பு கோட்டையாக கட்டிக்காத்து வருகிறார்.
மனிதநேயத்தை காக்க, அதிமுக அடலேறுகள் உறுதி எடுக்கும் இந்த பிறந்தநாளில் எம்.ஜி.ஆரை உயிராக நேசிக்கும் அதிமுக தோழர்களுக்கும், தமிழக மக்களுக்கும் இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications