பிப்ரவரி 4ல் பந்த் - இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு
சென்னை:பிப்ரவரி 4ம் தேதி அன்று தமிழகத்தில் பந்த் நடத்த இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. அப்போது இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்த முத்துகுமாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்துக்கு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை ஏற்றார். கூட்டத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், சிபிஐயை சேர்ந்த ஆர் நல்லகண்ணு, தா.பாண்டியன், பாஜகாவின் திருநாவுக்கரசர், மற்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புக்கள் கலந்து கொண்டன.
அதில் பழ.நெடுமாறன் பேசுகையில்,
இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு விரைவாக முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி 4ம் தேதி தமிழகம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 7ம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஊர்வலம் நடத்துவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழர் பிரச்சினைக்காக முதன் முறையாக பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் இன்று ஒருங்கிணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம், அரசியல், கட்சி வேறுபாடுகளை கடந்து ஜாதி, மத, இன உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இலங்கை தமிழர்களின் நலம் காக்கவேண்டும் என்று ஒன்று சேர்ந்திருப்பதால், இதில் திமுக, அதிமுக, காங்கிரஸ், திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளும் வந்து பங்கேற்க வேண்டும்.
இந்த இயக்கம் நடத்துகின்ற போராட்டங்கள் எதிலும் எந்தவித வன்முறையோ, பொது மக்களுக்கு இடையூறோ ஏற்படுத்தக்கூடாது என்றார் நெடுமாறன்.
பிப்ரவரி 4ம் தேதி இலங்கையின் சுதந்திர தினம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications