தெற்கில் 9ல் வெற்றி-சொன்னதைச் செய்த அழகிரி!

Subscribe to Oneindia Tamil

Alagiri with wife
மதுரை: தென் மண்டலத்தில் உள்ள பத்து தொகுதிகளையும் வென்று முதல்வர் கருணாநிதி காலடியில் வெற்றிக் கனியை சமர்ப்பிப்பேன் என்று கூறிய மு.க.அழகிரி, தென்காசியைத் தவிர மற்ற 9 தொகுதிகளையும் திமுக கூட்டணிக்கு வென்று காட்டியுள்ளார்.

தென் மாவட்டங்களில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி என பத்து தொகுதிகள் உள்ளன. தமிழகத்திலேயே அதிக தொகுதிகளைக் கொண்டுள்ள 2வது பகுதி, தென் மாவட்டங்கள்தான்.

இந்த பத்து தொகுதிகளையும் வெல்வேன் என்று திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளரான மு.க.அழகிரி, அப்பதவியில் நியமிக்கப்படவுடன் தெரிவித்தார்.

அதற்கேற்ப இந்தத் தொகுதிகளில் அவரது திட்டப்படி திமுகவினர் செயல்பட்டு வந்தனர்.

மதுரை தொகுதியில் தான் போட்டியிட்டதால் முழு வீச்சில் இந்தத் தொகுதிகளுக்கு அவரால் போக முடியாவிட்டாலும் கூட இவரது நிழல் இந்தத் தொகுதிகளில் பரவிக் கிடந்தது உண்மை.

குறிப்பாக விருதுநகர் தொகுதியில் அழகிரி போட்டுக் கொடுத்த ஸ்கெட்ச்சின்படிதான் திமுகவினர் பிரசாரம் செய்தனர். அங்கு இடையில் திமுகவினர் மந்தமாக இருப்பதாக தகவல் வந்ததும் உடனே விருதுநகர் தொகுதிக்குட்பட்ட திருமங்கலம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின்னல் வேக பயணம் மேற்கொண்டார் அழகிரி. இதையடுத்து மீண்டும் சூடு பிடித்தது பிரசாரம்.

அதேபோல ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளுக்கும் அவ்வப்போது விசிட் அடித்து விறுவிறுப்பேற்றி வந்தார் அழகிரி.

மேலும் தென் மாவட்டங்களில் கோஷ்டி சண்டையில் ஈடுபட்டு வரும் தலைவர்களை ஒன்றாக அழைத்து 'பாடமும்' நடத்தினார் அழகிரி. ''உங்கள் சண்டையை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்... தேர்தலில் உங்கள் உள்குத்து வேலைகளைக் காட்டினால் நான் மன்னிக்கவே மாட்டேன். எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் பதவியை காலி செய்வேன்'' என்று எச்சரித்தும் அனுப்பினார். இதுவும் பெரும் பலன் அளித்தது.

இப்படி அவரது நேரடி மேற்பார்வையில் நடந்து வந்த பிரசாரத்திற்கு உரிய பலன் கிடைத்துள்ளது. மொத்தம் உள்ள பத்து தொகுதிகளில் 9 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. தென்காசியில் மட்டுமே தோல்வியைச் சந்தித்தது.

தமிழகத்தில் உள்ள வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் காவிரி டெல்டா மண்டலங்களில் தெற்கு மண்டலத்தில்தான் திமுக கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் மு.க.அழகிரியின் செல்வாக்கு திமுக வட்டாரத்தில் மிகப் பெரிய அளவுக்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இனிமேல் திமுகவில் அழகிரியின் கை மேலும் ஓங்கும் என்பது நிச்சயம்.

சென்னையில் அழகிரி...:

இந் நிலையில் தேர்தலில் வென்ற பின் தனது மனைவி காந்தி, மகள் கயல்விழி, மகன் துரை தயாநிதி ஆகியோருடன் சென்னை வந்த அழகிரி தந்தை கருணாநிதி, தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.

முன்னதாக விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

எனக்குக் கிடைத்த வெற்றி மதுரை மக்களின் வளர்ச்சிக்கு கிடைத்த வெற்றி. மதுரை தொகுதியில் ஏழை மக்களின் அடிப்படை வசதிகளை முதலில் நிறைவேற்றுவேன். தேர்தல் பிரசாரத்தின் போது பொதுமக்களிடம் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் எனது முதல் பணி.

மக்கள் திட்டப்பணிகளை முதல்வர் கருணாநிதி வழியில் செய்வேன். ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அண்ணாவின் பொன்மொழிக்கு ஏற்ப ஏழை மக்களுக்கு நல்லது செய்வேன் என்றார்.

மத்திய அமைச்சர் ஆவீர்களா என்று கேட்டதற்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

எதுவரை பொறுக்க வேண்டும்? என்று கேட்டதற்கு, மத்திய மந்திரி சபை அமையும் வரை பொறுத்திருங்கள் என்றார் சிரித்தபடியே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+