கட்சி-குடும்ப 'பிரஷரில்' தவித்த கருணாநிதி!
டெல்லி: குடும்பத்தின் அனைத்து அங்கத்தினர்கள் மற்றும் கட்சித் தரப்பிலிருந்து நெருக்குதலில் சிக்கி கடந்த மூன்று நாட்களாக முதல்வர் கருணாநிதி பெரும்பாடு பட்டு விட்டதாகத் தெரிகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 எம்.பி. தொகுதிகளையும் கடந்த முறை நடந்த தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி வென்றது.
இந்த ஒட்டுமொத்த வெற்றிக்கும் காரணம் என்று கருணாநிதி வர்ணிக்கப்பட்டார். இதனால் அவர் கேட்ட எண்ணிக்கை மற்றும் பதவிகளை சோனியா காந்தி மறு பேச்சு பேசாமல் கொடுத்தார்.
ஆனால் இந்த முறை நிலைமை மாறிப் போய் விட்டது. கடந்த முறையைப் போல பெரும் வெற்றியைப் பெறத் தவறியது திமுக கூட்டணி. 28 இடங்களில் மட்டுமே இம்முறை கிடைத்தது. இது முதல் சறுக்கலாக அமைந்தது.
மேலும், திமுக கடந்த முறையை விட இம்முறை கூடுதல் இடம் கிடைத்தாலும் கூட காங்கிரஸுக்கு பாதி இடங்களில் தோல்வி ஏற்பட்டு விட்டது. இது 2வது சறுக்கல்.
இப்படி அடுத்தடுத்து இடையூறுகள் ஏற்பட்டதால் இந்த முறை காங்கிரஸ் கை சற்று மேலோங்கிப் போய் விட்டது. இதனாலதான் திமுக கேட்டதையெல்லாம் கொடுக்க இம்முறை காங்கிரஸ் தயாராக இல்லை.
மறுபக்கம் கருணாநிதிக்கு பலமுனைகளிலிருந்தும் நெருக்குதல்கள். குறிப்பாக குடும்பத்தின் அனைத்து தரப்பில் இருந்தும் ஏகப்பட்ட நெருக்குதல்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை டெல்லிக்கு வந்த முதல்வருடன் கிட்டத்தட்ட அவரது குடும்பத்தினர் அனைவருமே வந்து விட்டனர்.
தயாநிதி மாறனுக்கு, முதல்வரின் மூத்த மகள் செல்வியின் பலத்த சிபாரிசு. மூத்த மகன் மு.க.அழகிரிக்கு தாயார் தயாளு அம்மாளின் சிபாரிசு. கனிமொழிக்கு கண்டிப்பாக அமைச்சர் பதவி வாங்கியே ஆக வேண்டும் என துணைவியார் ராஜாத்தி அம்மாளிடமிருந்து கடும் நெருக்குதல்.
அதேபோல ராசாவுக்கும் கேபினட் அமைச்சர் பதவியை ஆக வேண்டும் எனவும் ராசாத்தி அம்மாள் நெருக்கி வந்தததாக தெரிகிறது. அதுவும் ஐ.டி. அமைச்சர் பதவியே கிடைக்க வேண்டும் எனவும் அவர் நெருக்கி வந்ததாக தெரிகிறது.
இதுதவிர நீண்ட கால விசுவாசியான டி.ஆர்.பாலுவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தி எழலலாம் என்ற கட்சி நெருக்குதல் மறுபுறம்.
ஆனால், இந்த நெருக்குதல்களையும், மிரட்டல் கோரிக்கைகளை காங்கிரஸ் முன் வைக்க இயலாத நிலையில் கருணாநிதி இருந்தார் என்பதுதான் உண்மை.
காரணம், தமிழகத்தில் திமுக ஆட்சி நீடிக்க தேவைப்படும் காங்கிரஸ் கட்சியின் 35 எம்.எல்.ஏக்களின் ஆதரவு.












Click it and Unblock the Notifications