புதுக்கோட்டையில் பயங்கரம் - அதிமுக வக்கீல் கொடூரமாக வெட்டிக் கொலை
புதுக்கோட்டை: நிலத்தகராறு தொடர்பாக அதிமுக வக்கீலை வழிமறித்து அவரை 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பியது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் கள்ளர் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (31). வழக்கறிஞரான இவர் அ.தி.மு.க. மாணவரணி செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.
இவருக்கும் கூத்தினிப்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக அன்னவாசல் போலீஸில் ஒரு புகார் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், நேற்று தனது உறவினர்களுடன் அன்னவாசலில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்குச் சென்றார் கார்த்திகேயன்.
கல்யாணத்தை முடித்து விட்டு காவல் நிலையம் சென்ற கார்த்திகேயன், செல்லத்துரை கொடுத்த புகாருக்குப் பதில் மனுவை அளித்து விட்டு கீரனூர் கிளம்பினார்.
அப்போது அவருக்கு ஒரு போன் வந்தது. உங்களைத் தாக்க கீரனூரில் ஒரு குரூப் நிற்கிறது என்று அந்த நபர் பேசியுள்ளார். இதையடுத்து கீரனூல் செல்லாமல், புதுக்கோட்டைக்குத் திரும்பினார்.
அப்போது, சிப்காட் அருகே உள்ள தாவூத் மில் பக்கம் அவர் வந்து கொண்டிருந்த போது அவரது காரை பின் தொடர்ந்து 2 கார்களில் வந்தவர்கள் கார்த்திகேயன் காரை மறித்து முன்னே சென்று மடக்கினர்.
இதனால் கார்த்திகேயன் காரை இடதுபக்கமாக திருப்பினார். ஆனால் கார் சாலையோரம் இருந்த மைல் கல்லில் மோதி நின்றது.
இதையடுத்து துரத்தி வந்த கார்களில் இருந்த 10 பேரும் கீழே இறங்கி கார்த்திகேயன் உள்ளிட்டோரை சுற்றி வளைத்தனர். அவர்களிடமிருந்து தப்ப கார்த்திகேயன் உள்ளிட்டோர் முயன்றனர்.
ஆனால் அக்கும்பல் கார்த்திகேயனை மட்டும் குறி வைத்து மடக்கிப் பிடித்து சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் தலை உடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த கார்த்திகேயன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications