ஆயுள் தண்டனை என்றாலே ஆயுசு முழுக்க சிறைதான்- உச்சநீதிமன்றம்
டெல்லி: 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்ட காரணத்தால் ஆயுள் கைதிகள் விடுதலை கோர முடியாது. ஆயுள் தண்டனை என்றாலே அது ஆயுள் முழுவதற்கும் வழங்கும் தண்டனை தான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்ராஜ். இவர் 1993ம் ஆண்டு தன் மனைவியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றார். 14 ஆண்டுகளுக்கு மேல் அவர் சிறையில் உள்ளார்.
ராம்ராஜ் தன்னை சிறையில் இருந்து விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆயுள் தண்டனை பெற்றவர்கள் 14 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தால் விடுவிக்கப்படலாம் என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அல்டமாஸ் கபீர், சிராக் ஜோசப் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 'ஆயுள் தண்டனை பெற்றவர்கள் குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பிறகே விடுவிக்கப்பட முடியும்' என்று கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 'ஆயுள் தண்டனை என்றாலே அது ஆயுள் முழுவதற்கும் வழங்கும் தண்டனை தான். எனவே 14 ஆண்டுகள் ஜெயிலில் இருந்துவிட்டால் அதற்காக விடுதலை செய்ய உரிமை கோர முடியாது.
ஆயுள் தண்டனை காலத்தை குறைக்கும் அதிகாரம் அரசியல் சட்டம் 72வது பிரிவின்படி ஜனாதிபதிக்கும், 161வது சட்டப்படி கவர்னருக்கும் உள்ளது. இவர்களை தவிர தண்டனையை யாராலும் குறைக்க முடியாது' என தீர்ப்பளித்தனர்.












Click it and Unblock the Notifications