ஜோதிபாசுவின் மூளையை ஆராய 'நிமான்ஸ்' ஆர்வம்

Subscribe to Oneindia Tamil

Jyoti Basu
பெங்களூர்: மறைந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின் மூளையை ஆய்வுக்கு உட்படுத்த பெங்களூரைச் சேர்ந்த தேசிய மன நலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகம் (நிமான்ஸ்) விருப்பம் தெரிவித்துள்ளது.

மறைந்த ஜோதிபாசுவின் கடைசி விருப்பப்படி அவரது உடல் கொல்கத்தா அரசு மருத்துவமனைக்குத் தானமாக அளிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் தற்போது அவரது மூளையை ஆராய்ச்சி செய்ய பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றன.

வயோதிகம் மற்றும் அதுதொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜோதிபாசுவின் மூளை நரம்புகளில் ஆய்வு செய்ய இவை விரும்புகின்றன.

குறிப்பாக நிமான்ஸ் நிறுவனம் இந்த விஷயத்தில் தீவிர அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் முன்னணி மன நல மருத்துவ ஆய்வுக் கழகம்தான் நிமான்ஸ். பெங்களூரில் உள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கழகத்தின் நரம்பியல் நோய் துறை தலைவர் டாக்டர் எஸ்.கே.சங்கர் கூறுகையில், மனித மூளை வங்கி இந்தியாவிலேயே நிமான்ஸ் கழகத்தில் மட்டும்தான் உள்ளது. இங்குதான் மூளை தொடர்பான ஆராய்ச்சிக்கான வசதிகளும் உள்ளன.

ஜோதிபாசுவின் மூளையை ஆய்வு செய்ய நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். இருப்பினும், தற்போது ஜோதிபாசுவின் உடல் தானமாக அளிக்கப்பட்டு விட்டதால், அவரது உடலை பெற்றுள்ள கொல்கத்தா முதுநிலை மருத்துவ கல்வி ஆய்வுக் கழகம்தான் மூளையை ஒப்படைப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து கொல்கத்தா ஆய்வுக் கழக அதிகாரிகள் கூறுகையில், நிமான்ஸ் மருத்துவமனையின் ஆர்வம் குறித்து அறிந்தோம். அவர்கள் முறைப்படி விண்ணப்பித்தால் நிச்சயம் அதை ஒரு கமிட்டி வைத்து ஆராய்ந்து முடிவெடுப்போம் என்றனர்.

ஜோதிபாசுவின் மூளையை வைத்து எந்த மாதிரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பது குறித்து டாக்டர் சங்கர் விவரிக்கையில், 95 வயதானாலும் கூட கடைசி வரை மிகுந்த ஆரோக்கியத்தோடு இருந்தவர் ஜோதிபாசு. அதாவது சிறந்த மன நலத்தோடு அவர் காணப்பட்டார்.

இந்த வயதில் மூளையின் செயல்பாடுகள் சிறப்பான முறையில் இயங்கி வருவது உண்மையிலேயே பெரிய விஷயம். எனவே ஜோதிபாசுவின் மூளை சிறந்த முறையில் இயங்கி வர எது காரணமாக இருந்ததை ஆராய்ந்து அறிய முடியும்.

இந்த மூளையின் செயல்பாடுகளையும், வயோதிகத்தின்போது ஏற்படும் மூளை தொடர்பான நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்படுவோரின் மூளையையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

ஜோதிபாசுவின் மூளை எங்களுக்குக் கிடைத்தால் அதை மிகவும் பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் வைத்திருப்போம். அதில் ஆய்வில் ஈடுபடும் ஆய்வாளர்களுக்குக் கூட அது பாசுவுடைய மூளை என்பது தெரிவிக்கப்பட மாட்டாது.

அதைக் காட்சிப் பொருளாக்க நாங்கள் விரும்பவில்லை. எங்களிடம் வரும் ஒவ்வொரு மூளையையும் நாங்கள் மிகுந்த கவனத்தோடு கையாளுகிறோம். அதை விட கூடுதல் கவனம் ஜோதிபாசுவின் மூளைக்குத் தரப்படும் என்றார்.

நிமான்ஸ் மருத்துவமனையில் உள்ள மூளை வங்கி 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு அனைத்து வயதையும் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மூளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+