2வது லிஸ்ட்டில் 11 தமிழக நிகர்நிலை பல்கலைகள்!!
சென்னை: சமீபத்தில் 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைத்துள்ள மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை, இவை போக மேலும் 44 நிகர் நிலைப் பல்கலைகழகங்கள் தங்களைத் திருத்திக் கொள்ள வாய்ப்பளிக்கலாம் என தெரிவித்துள்ளது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்தவை 11 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகும். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவை 13 ஆகும்.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள், முறைகேடுகள் குறித்து நியமிக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையில் 44 நிகர்நிலைப் பல்கலைக்கழங்களின் அங்கீகாரத்தை திரும்பப் பெறுமாறு கூறப்பட்டுள்ளதாக சமீபத்தில், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் இந்தப் பட்டியலில் மேலும் 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் 11 நிறுவனங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவையாகும்.
மொத்தம் உள்ள 126 நிகர்நிலைப் பல்கலைக்கழங்களையும் மூன்று வகைகளாக பிரித்துள்ளது நிபுணர் குழு.
அதில், முதலாவது பட்டியலில் உள்ள 38 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் சிறப்பான முறையில் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது பட்டியலில் (பி லிஸ்ட்) 44 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், அவற்றை நிவர்த்தி செய்ய பரிந்துரைக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
3வது பட்டியலில் 44 நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. மோசமான முறையில் செயல்படும் இவற்றின் அங்கீகாரத்தைத்தான் ரத்து செய்ய நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
2வது பட்டியலில் பல முக்கிய கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.
தற்போதைய நிலை தொடர உத்தரவு...
இதற்கிடையே, அங்கீகாரத்தை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ள 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவு குறித்து விளக்கம் கேட்டு அந்த பல்கலைக்கழகங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸும் அனுப்பியுள்ளது.
சுமார் 2 லட்சம் மாணவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் மனுக்களையும் விசாரித்த பின்னரே தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தல்வீர் பந்தாரி மற்றும் ஏ.கே. பட்நாயக் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு தெரிவித்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் தொடர்பாக ஆய்வுக் குழு அளித்த அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது குறித்து தெரிவிக்கும்படி பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு (யுஜிசி) நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அங்கீகாரம் ரத்தாகும் நிலையில் உள்ள 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், 17 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications