திருப்பூரில் அபாயகரமன குற்றவாளிகள்- எஸ்.பி. 'வாக்குமூலம்'
திருப்பூர்: வெளிமாவட்டங்களில் பயங்கர குற்றங்களை செய்து விட்டு, திருப்பூரில் பல்வேறு சமூக விரோதிகள் அடைக்கலம் புகுந்துள்ளதாக திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அருண் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பின்னலாடைக்கு பெயர் போனது. இதனால் திருப்பூரில் 1000 க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள் வசிக்கின்றனர்.
இதனால் பணம் கொடுக்கல் வாங்கல் குறித்து இவர்களிடையே சிறு சிறு பிரச்சனைகள் தோன்றுவது வாடிக்கை.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரவுடிகள் உள்ளே புகுந்து கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர். ஒரு சில ரவுடிகள் ஆளும் கட்சி நிர்வாகிகள் உதவியுடன் அடிதடி, ஆள் கடத்தல், நில அபகரிப்பு போன்ற பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற புகார் கடந்த பல மாதங்களாக நீடித்து வருகின்றது.
இந்த நிலையில், திருப்பூர் எஸ்.பி அருண் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருப்பூரில் அதிக மக்கள் தொகை காரணமாக, குற்றவாளிகளை இனம் காணுவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது.
பொதுமக்கள் மற்றவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கும் போது, அவர்களுடைய அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்த பின்னரே, வீடு கொடுக்க வேண்டும்.
வாடகைக்கு வருபவர்களிடம் போட்டோ, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் உள்ளிட்ட அடையாள சான்றுகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் குற்றவாளிகளுக்கு எளிதில் வீடு கிடைக்காது.
அனைத்து மக்களின் விவரங்களையும் போலீசாரால் மட்டுமே சேகரித்து வைக்க முடியாது. எனவே, வீட்டு உரிமையாளர்கள், தங்களது காம்பவுண்டுக்குள் வசிக்கும் அனைவரின் விவரங்களையும் சேகரித்து வைக்க வேண்டும்.
பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் தான் சந்தேகப்படும் படியான நபர்கள், குற்றவாளிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications