விவசாயியிடம் நில அபகரிப்பு: குடியரசுத் தலைவரின் கணவர் மீது புகார்
அமராவதி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் கணவர் நில அபகரிப்பு வழக்கி்ல் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவில் உள்ள அமராவதி மாவட்டத்தில் உள்ள சந்திராப்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கிஷோர் பன்சாத்.
இவர் தனக்கு சொந்தமாக இருந்த 1.02 ஹெக்டேர் விவசாய நிலத்தை, குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலின் கணவர் தேவிசிங் ஷெகாவத் மற்றும் சிலர் சேர்ந்து அபகரித்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக, அமராவதி வருவாய் நீதிமன்றத்தில் விவசாயி சார்பில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த எஸ்டிஓ அதிகாரி சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தில், அரசு நில ஆவணங்களில் உரிமையாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ள குடியரசுத் தலைவரின் கணவர் தேவிசிங் ஷெகாவத் மற்றும் அவரது உறவினர்கள் 5 பேரின் பெயர்களை நீக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய நிலத்தை இவர்களது பெயருக்கு மாற்றி வட்டார அதிகாரி கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி செய்த மாற்றம் செல்லாது என்றும் அறிவித்தார்.
மேலும் நிலத்தை மீண்டும் முறையாக அளந்து உண்மையான உரிமையாளரிடம் (பன்சாத்) ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவில் கூறி உள்ளார்.
அதே நேரத்தில் எதிர் மனுதாரர்களான தேவிசிங் ஷெகாவத் வகையறாக்கள் இந்த உத்தரவு தொடர்பாக அப்பீல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 1998ம் ஆண்டு புல்தானா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஆசிரியை ஒருவர் தற்கொலை வழக்கில் ஷெகாவத் சம்மந்தப்பட்டிருப்பதும், அதுதொடர்பான வழக்கை அவர் எதிர்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 2002ம் ஆண்டில் அமராவதி மக்கள் கூட்டுறவு வங்கியில் இவர் ஜாமீனில் கடன் வாங்கிய ஒருவர் கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வந்ததும், அதுதொடர்பான புகாரில் ஷெகாவத் சிக்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications