தமிழகத்தில் காங்கரஸ் ஆட்சி: கார்த்தி சிதம்பரம் ஆவேசம்; தங்கபாலு ஆறுதல்

மறைந்த முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 70வது பிறந்தநாள் விழா சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, வாழப்பாடி ராம.சுகந்தன், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் டி.சுதர்சனம், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கார்த்தி ப.சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் கார்த்தி ப.சிதம்பரம் பேசுகையில், "தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சி தான் ஆட்சியை பிடிக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியால் 42 ஆண்டுகளாக ஆட்சியை பிடிக்க முடியவில்லை.
மக்கள் பிரச்சினைகளுக்காக போராடாமல், சட்டசபையில் குரல் எழுப்பாமல் காங்கிரஸ் கட்சி மக்களிடம் போக முடியாது. ஆட்சியைப் பிடிக்கும் கட்சியாக காங்கிரஸ் மாற வேண்டும்," என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, 'தமிழகத்தில் கடந்த 42 ஆண்டுகளாக தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியுள்ளது.
நான், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் எல்லாம் ஜெயிலில் இருந்துள்ளோம். இந்தியாவை வலிமையான பாதைக்கு அழைத்து செல்லும் பணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
சோனியாகாந்தி எதைச் சொன்னாலும், அதை செய்ய தயாராக உள்ளோம். மத்திய மந்திரி சிதம்பரத்தின் கருத்திற்கு, கார்த்தி ப.சிதம்பரத்தின் கருத்து ஒத்துவராது.
காங்கிரஸ் கட்சி நாட்டை ஆள வேண்டும். சோனியாகாந்தியின் தலைமை நீடிக்க சில தியாகங்களை செய்து தான் ஆக வேண்டும்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரமுடியவில்லை என்ற கார்த்தி ப.சிதம்பரத்தின் ஆதங்கம் புரிகிறது. சோனியாகாந்தி கூறினால் சட்டசபையில் காங்கிரஸ் குரல் ஒலிக்கும். காங்கிரஸ் கட்சி மட்டும் தான் இந்திய ஜனநாயகத்தை காக்கும் கட்சி.
ராகுல்காந்தி வருகையால் தமிழக காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது. 10 மாதங்களில் 70 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். உறுப்பினர் படிவத்தில் புகைப்படம் ஒட்டி சேர்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான்' என்றார்.












Click it and Unblock the Notifications