இன்று ஸ்டாலின் 57வது பிறந்த நாள்: எதியூரப்பா-ரஜினி வாழ்த்து
சென்னை: இன்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் 57வது பிறந்த நாளையொட்டி மாநிலம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
பிறந்த நாளையொட்டி இன்று காலை 6 மணிக்கு கோபாலபுரம் சென்ற ஸ்டாலின், அங்கு முதல்வர் கருணாநிதி, தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.
பின்னர் ஆழ்வார்பேட்டை சென்டாப் சாலையில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிய ஸ்டாலி்னை அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
மேலும் தமிழகம் முழுவதும் இருந்தும் வந்து குவிந்துள்ள ஆயிரக்கணக்கான திமுகவினர் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
எதியூரப்பா-ரஜினி வாழ்த்து:
இந் நிலையில் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
கர்நாடக முதல்வர் எதியூரப்பாவும் தொலைபேசி மூலம் ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
ஸ்டாலினை மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன், சன் குழும அதிபர் கலாநிதி மாறன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோரும் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
கவர்னர் பர்னாலா, அவரது துணைச் செயலாளர் விவேகானந்தன் மூலம் பூங்கொத்து அனுப்பி வாழ்த்துத் தெரிவித்தார்.
அதே போல தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி ஆகியோரும் நேரில் சந்தித்து வாழ்த்தினர்.
அப்போது மதிமுக மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் பல்லாவரம் மோகன், ஸ்டாலினை சந்தித்து திமுகவில் சேர்ந்தார்.
இதே போல விருதுநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் முருகேசனும், ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து இன்று திமுகவில் இணைந்தார்.
ரத்ததான முகாம்-அறுசுவை உணவு விழா!:
ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ரத்ததான முகாம், நல உதவிகள் வழங்கும் விழா மற்றும் அறுசுவை உணவு வழங்கும் விழாக்களுக்கு அமைச்சர் தா.மா.அன்பசரன் ஏற்பாடு செய்துள்ளார்.
கோவையிலும் ரத்த தானம்:
அதே போல கோவை மாவட்ட திமுக சார்பில் 1000 பேர் ரத்த தானம் வழங்கும் முகாம் கோவை சிவானந்தா காலனி லயன்ஸ் கிளப் திருமண மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது. அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி முகாமை தொடங்கி வைத்தார். நாளையும் இந்த முகாம் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications