புதுக்கோட்டை அருகே போலீஸ்-பொது மக்கள் மோதல்: 50 பேர் கைது
புதுக்கோட்டை: மின்தடையை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது, போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஊராட்சி தலைவர் உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால், விவசாயிகளும், வியாபாரிகளும், தேர்வுக்கு தயராகும் மாணவ, மாணவிகளும் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். மேலும், மின் தடை காரணமாக ஊராட்சிகளில் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டது.
இதனால், பொன்னமராவதி மின்வாரிய கிளை அலுவலக உதவி செயற்பொறியாளரிடம் பொது மக்கள் சார்பில் மின் தடையை நீகக கோரி புகார் மனு அளித்தனர். ஆனாலும் மின் தடை தொடர்ந்த வண்ணம் இருந்தது.
இதனையடுத்து, ஆவேசம் அடைந்த பொன்னமராவதி மற்றும் ஆலவயல், நகரப்பட்டி, கண்டியாநத்தம், அம்மாப்பட்டி உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பொன்னமராவதி தாலுகா அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்பு அது மோதலாக மாறியது.
இந்த நிலையில், போலீசார் மீது மர்ம நபர் ஒருவர் கல் வீசி தாக்கினார். அந்த கல் ஏட்டு கணேசமூர்த்தி தலையில் பட்டு ரத்தம் வழிந்தது.
இதனையடுத்து, அங்கு திரண்டு இருந்த கிராம மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில், ஊராட்சி தலைவர் உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர்.
ஆத்திரமடைந்த கிராம மக்கள், போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல் காணப்பட்டது. இதில் கிராம மக்கள் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனால், பொன்னமராவதி மற்றும் கொப்பனாப்பட்டி பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications