Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் மின் பற்றாக்குறை தொடரும் - அமைச்சர் அன்பழகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின் நுகர்வு அதிகரித்துக்கொண்டே போவதால் தமிழகத்தில் மின் பற்றாக்குறை பிரச்னை தொடரும் என நிதியமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

2010-11ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்றது.

வருவாய் பற்றாக்குறை, பொருளாதார வளர்ச்சி, மின் உற்பத்தி நிலவரம் ஆகியவை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு நிதியமைச்சர் அன்பழகன் அளித்த விளக்கம் வருமாறு:

பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை பற்றி இங்கு எல்லோரும் பேசினார்கள். எதிர்க்கட்சி துணைத்தலைவர் அது பெரிய ஆபத்து போல் சொன்னார். அவர்களுடைய ஆட்சியிலும் பற்றாக்குறை இருந்தது.

மாநில அரசின் வருவாய் பற்றாக்குறை, 2009-10ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ரூ.1,024 கோடியாகவும், திருத்த மதிப்பீட்டில் ரூ.5,020 கோடியாகவும் இருந்தது.

திட்ட மதிப்பீட்டை காட்டிலும் ரூ.3,996 கோடி பற்றாகுறை அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறினார்கள். உலக பொருளாதார மந்தநிலை காரணமாக அரசின் வருவாய் குறைந்ததே பற்றாகுறை அதிகரித்ததற்கு முக்கிய காரணம்.

வரவு செலவு திட்ட மதிப்பீட்டுக்கும், திருத்த மதிப்பீட்டுக்கும் இடையே உள்ள வருவாய் பற்றாகுறை வேறுபாடு தமிழகம் மட்டுமின்றி மராட்டியம், மேற்குவங்கத்திலும் உள்ளது.

தமிழகத்தோடு அடிக்கடி ஒப்பிடப்படும் மராட்டிய மாநிலத்தில், திருத்த மதிப்பீட்டில் பற்றாக்குறை ரூ.12,730 கோடியாகவும், வரவுசெலவு திட்ட மதிப்பீட்டைக் காட்டிலும் ரூ.5,207 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

மத்திய அரசிலும் 2009-10 நிதியாண்டில் ரூ.46,324 ஆயிரம் கோடி பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இது பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்டது. கூடுதல் வரி விதிப்பது, செலவுகளை கட்டுப்படுத்துவது தீர்வாகாது.

2009-10 நிதியாண்டில் மாநில அரசில் பற்றாக்குறை இருப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே, பொருளாதார மந்தநிலை காலத்தில், வருவாய் பற்றாகுறை இருப்பது தவறல்ல.

வரும் நிதியாண்டில் அரசு வருவாய் பற்றாக்குறையை ரூ.3,396 கோடி அளவுக்கு குறைக்க கருதியுள்ளது. 6வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் 2010-11 நிதியாண்டில் மாநில அரசு வருவாயில் உபரி இருந்திருக்கும்.

தமிழகத்தில் வளர்ச்சி விகிதம் 4 சதவீதமாக குறைந்துவிட்டது என்று சொல்கிறார்கள். ஆனால், அது கேரளத்தில் 7 ஆகவும், ஆந்திரத்தில் 5.5 சதவீதமாகவும், கர்நாடகத்தில் 5.1 சதவீதமாகவும் இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.

இந்த அரசு பொறுப்பேற்ற 2006-07ம் ஆண்டில் வளர்ச்சி வீதம் 11.29 ஆக இருந்தது. 2007-08 நிதியாண்டில் 4.1 ஆகவும், 2008-09ம் ஆண்டில் 4.5 சதவீதம் ஆகவும் குறைந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு, உலக பொருளாதார மந்த நிலையும், மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள சேதமுமே காரணம்.

பொருளாதார வளர்ச்சி என்பது, வேளாண்மை, தொழில், நற்பணி ஆகியவற்றில் ஏற்படும் ஒட்டுமொத்த வளர்ச்சியின் குறியீடாகும்.

2009-10ம் ஆண்டில் பொருளாதார மந்தநிலை சீரடையும் சமயத்தில் வளர்ச்சியும் 5.53 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது வளர்ச்சிவீதம் 2001-02ம் ஆண்டில் 1.1 சதவீதமாகவும், 2002-03ம் ஆண்டில் 1.75 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முந்தைய அதிமுக ஆட்சியில் மின் உற்பத்தி திட்டங்கள் சிலவற்றை தொடங்கினார்கள். ஆனால் உற்பத்தி அதிகரிக்கவில்லை. 2009-10 நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டபடி வடசென்னை அனல்மின் நிலையம் விரிவாக்க திட்டத்தின் 600 மெகாவாட் பிரிவு 2011ம் ஆண்டு பிப்ரவரியில் உற்பத்தி தொடங்கும். 2வது பிரிவு, 2011 ஆகஸ்டில் உற்பத்தியை தொடங்கும்.

மேட்டூரில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பிரிவு, 2011 ஏப்ரலில் செயல்படும். கூடங்குளம் திட்டம் வேகமாக நிறைவேறாததற்கு அதை செயல்படுத்தும் ரஷ்ய நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னையே காரணம்.

மின் நுகர்வு அதிகரித்துக்கொண்டே போகிறது. அதனால் மின் பற்றாக்குறை எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும். தண்ணீர் பற்றாக்குறை போல் மின்சார பற்றாக்குறையும் தொடரும்.

நமது பங்கு நிதியை மத்திய அரசில் இருந்து பெறவில்லை என்று அதிமுக உறுப்பினர் ஜெயகுமார் பேசினார். மத்திய அரசு பகிர்ந்து அளிக்கும் நிதியை நிதிக்குழுதான் பகிர்ந்தளிக்கிறது.

13வது நிதிக்குழு பரிந்துரை பேரில் தான் மாநிலங்களுக்கு நிதி தரப்படும். மத்திய அரசின் ஆலோசனையை கேட்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.

மக்கள் தொகை, மாநில பரப்பு, சொந்த வருவாய், நிதி தட்டுப்பாடு ஆகிய கூறுகள் அடிப்படையில் நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழகம் சிறப்பாக செயல்படும் மாநிலம் என்பதால் நிதி குறைந்துள்ளது.

ஆனாலும், சிறப்பாக செயல்படும் மாநிலமான நமக்கு, பல்வேறு செலவினங்களுக்கு அளிக்கப்படும் மானியம் 13வது நிதிக்குழுவால் உயர்த்தி அளிக்கப்படவுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளபடி, 2010-2011 முதல் 2014-15 ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் தமிழக அரசுக்கு ரூ.5,000 கோடி மத்திய நிதி குறைவாக கிடைக்கும். அதாவது ரூ.77 ஆயிரம் கோடி கிடைப்பதற்கு பதிலாக ரூ.72,070 கோடி தான் கிடைக்கும்.

பல்வேறு செலவுகளுக்கு மானியமாக கிடைக்கும் தொகை கூடுதலாக ரூ.4 ஆயிரம் கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தத்தில், 2010-11 நிதியாண்டில் 13வது நிதிக்குழு பரிந்துரையால் தமிழக அரசுக்கு 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நியாயவிலை கடைகளில் 1 ரூபாய் அரிசி வழங்குவதில் ஆண்டுக்கு ரூ.1,700 கோடி இழப்பு ஏற்படுகிறது. கடந்த 2009-10 நிதியாண்டில் வெளியிடப்பட்ட 72 அறிவிப்புகளில் 60 அறிவிப்புகளில் செயல்படுத்த அரசு ஆணை வெளியிட்டுவிட்டது.

32 அறிவிப்புகளில் அரசு செய்ய வேண்டிய பணிகளை செய்துமுடித்துவிட்டது என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+