ஆஸி அருகே நடுக்கடலில் 5 இலங்கை தமிழர்கள் பலி
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புக படகு மூலம் பயணம் செய்த 64 இலங்கை தமிழர்களின் படகு பழுதடைந்ததால் அதில் தவித்தவர்களில் 5 பேர் பலியாகிவி்ட்டதாகத் தெரிகிறது.
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புக படகு மூலம் பயணம் செய்த 64 இலங்கை தமிழர்களின் படகு ஆஸ்திரேலியா அருகே இந்தியப் பெருங்கடலில் பழுதடைந்தது.
நடுக்கடலில் சிக்கித் தவித்த இவர்களை நேற்று முன்தினம் அந்த வழியே சென்ற ரஷ்ய கப்பல் மீட்டது. அதில் 59 பேர் மட்டுமே இருந்தனர். மேலும் 5 பேரைக் காணவில்லை. அவர்கள் அணிந்திருந்த உயிர்காப்பு கவசங்கள் அந்தப் பகுதியில் மிதந்தன.
மீட்கப்பட்ட பயணிகளுடன், அவர்கள் வந்த படகையும் கட்டி இழுத்துச் சென்ற ரஷ்ய கப்பல், நேற்று காகஸ் தீவை அடைந்தது. அவர்கள் அனைவரும் அருகில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் உள்ள ஆஸ்திரேலிய முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அந் நாட்டு அரசு அறிவித்துள்ளது.
காணாமல் போன 5 தமிழர்களும் பலியாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
'பிரபாகரன்' பச்சை குத்தியிருந்தவர் மரணம்:
இந் நிலையில் தமிழகத்தின் தாராபுரம் பஸ் நிலையத்தில் கடந்த 7ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் கை, கால்கள் செயல்படாமல் மயங்கி விழுந்தார். அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு பக்கவாதம தாக்கியது தெரியவந்தது.
மேலும் அவரது வலது நெஞ்சுப் பகுதியில் 'வேலுப்பிள்ளை பிரபாகரன்' என பச்சை குத்தியிருந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. அவர் இன்னும் மயக்க நிலையிலேயே இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை.
தாராபுரம் மருத்துவமனையில் பக்கவாத சிகிச்சைக்கு வசதி இல்லாததால், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
அவர் இலங்கையைச் சேர்ந்தவரா என்ற விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications