தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் சட்டவிரோதமானது-ஜெ.
சென்னை: தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் வெளிப்படையாக நடைபெறவில்லை. நான் கேட்ட தகவல்களை அரசு தரவில்லை. சட்டத்திற்குப் புறம்பான செயல் இது என்பதால்தான் தலைமைத் தகவல் ஆணையர் நியமனம் தொடர்பான கூட்டத்தை நான் புறக்கணித்தேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
2005-ஆம் ஆண்டு தகவல் உரிமை சட்டத்தின்படி, தலைமைத் தகவல் ஆணையரையும், தகவல் ஆணையர்களையும் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முதல்வரால் தெரிவு செய்யப்படும் ஓர் அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழு தேர்வு செய்ய வேண்டும்.
2005 ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி, முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முதல்வரால் தேர்வு செய்யப்படும் ஓர் அமைச்சர் தான் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்ள முடியுமே தவிர, பிரதிநிதிகளை நியமிப்பதற்கான உரிமை குழு உறுப்பினர்களுக்குக் கிடையாது.
2005-ஆம் ஆண்டு நான் முதல்வராக இருந்த போது நடைபெற்ற கூட்டத்தில், கருணாநிதி தனக்கு பதிலாக அன்பழகனை அனுப்பி வைக்கவில்லை. அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தான் அன்பழகன் கலந்து கொண்டார்.
குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஏதுவாக, குழுவின் உறுப்பினர் என்ற முறையில் தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர்களை அரசிடம் கோரியிருந்தேன். ஆனால், அரசு அந்த விவரங்களை அளிக்கவில்லை.
எனவே, எந்த விதமான விவரமும் இன்றி கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்க முடியாது என்பதால் தான் அந்தக் கூட்டத்திற்கு செல்லவில்லை. நான் கோரிய விவரங்களை அரசு அளித்திருக்குமேயானால், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பேன்.
மேற்படி குழுவில் எதிர்க்கட்சித் தலைவரை நியமித்ததற்குக் காரணமே, வெளிப்படையான முறையில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான்.
நான் கோரிய விவரங்களை தி.மு.க. அரசு அளிக்காததால் தான் தலைமை தகவல் ஆணையர் நியமனக் குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதையும்; நியமனக் குழு உறுப்பினர் என்ற முறையில் எனக்கு விவரங்கள் அளிக்காமல் தலைமை தகவல் ஆணையர் நியமனம் செய்யப்பட்டதன் மூலம், இந்த நியமனம் வெளிப்படையான முறையில் நடைபெறவில்லை என்பதையும், தி.மு.க. அரசின் நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பான செயல் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications