காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேலுக்குப் பிறப்பிக்கப்பட்ட மெமோவுக்கு தீர்ப்பாயம் தடை
சென்னை: காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு தமிழக அரசு பிறப்பித்த மெமோவுக்கு இடைக்காலத் தடை விதித்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு கிழக்கு காவல் மாவட்டத்தின் எஸ்.பியாக பொன்மாணிக்கவேல் 27.5.01 முதல் 9.3.03 வரை பணியாற்றினார். அந்த காலகட்டத்தில் சென்னை விமான நிலையத்தில் பிரிபெய்டு டாக்சி ஓட்டுனர்களுக்கும், கால் டாக்சி ஓட்டுனர்களுக்கும் இடையே பிரச்சினை எழுந்தது.
அவர்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக 11.1.03 அன்று பொன்மாணிக்கவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிரச்சினை ஏற்பட்டு இறுதியில் தடியடி பிரயோகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து விளக்கம் கேட்டு அவருக்கு உள்துறை செயலாளர் 5.6.10 என்று குற்ற குறிப்பாணை அனுப்பினார். அதில், சாதாரணமாக பேசி தீர்க்க வேண்டிய விஷயத்தில் தடியடி பிரயோகம் செய்திருக்கிறீர்கள். ஒருங்கிணைப்பாக நடக்க வேண்டிய நேரத்தில் சரியான முறையில் செயல்படாமல் இருந்தீர்கள்.
மேலும், மாதவரம் போலீஸ் நிலையத்தில் அடைக்கப்பட்டு இருந்த இலக்கியன் என்பவரை பார்க்க வந்தபோது அவரது தந்தை அந்தோணியை அடித்து உதைத்து காயப்படுத்தி இருக்கிறீர்கள். இதுபோன்ற செயல்பாடுகளின் மூலம் பணிவிதிகளை மீறியுள்ளீர்கள், என்று கூறப்பட்டு இருந்தது.
இதை எதிர்த்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் பொன்மாணிக்கவேல் வழக்கு தாக்கல் செய்தார். இதை தீர்ப்பாயத்தின் நீதிப்பிரிவு உறுப்பினர் இளங்கோ, நிர்வாக உறுப்பினர் சதபதி ஆகியோர் விசாரித்தனர்.
பின்னர்,
8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சமீபத்தில் குற்றக் குறிப்பாணை அனுப்பப்பட்டு உள்ளது. இந்த குறிப்பாணையை காலதாமதமாக அனுப்புவதற்கு சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை.
எனவே 5.6.10 தேதியிட்ட அந்த குற்ற குறிப்பாணையை செயல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. 28.10.10 அன்று இந்த வழக்கில் விசாரணை நடைபெறும் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications