முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு வரும் ஜெ.வுக்குப் பாதுகாப்பு-அதிமுக கோரிக்கை
சென்னை: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்கிறார். அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
அக்டோபர் 30ம் தேதியன்று பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை வழக்கம் போல விசேஷமாக நடைபெறவுள்ளது. இந்த குருபூஜையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
தற்போது தேர்தல் காலம் நெருங்கி வருவதால் லெட்டர் பேட் கட்சிகள் முதல் முன்னணிக் கட்சிகள் வரை அனைத்துக் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களும் குருபூஜைக்கு வரவுள்ளனர். எனவே வழக்கத்தை விட அதிக அளவில் இந்த முறை கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுங்கட்சியான திமுக சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். அதிமுக தரப்பில் முன்பு ஜெயலலிதா வந்து போய்க் கொண்டிருந்தார். சமீப ஆண்டுகளாக அவர் வருவதில்லை. ஆனால் தற்போது சட்டசபைத் தேர்தல் வரவுள்ளதால் அவரும் இந்த ஆண்டு வரப் போகிறாராம்.
ராமநாதபுரத்தில் கலெக்டர் ஹரிஹரன் தலைமையில், நேற்று நடந்த குரு பூஜை தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில், ஜெயலலிதா குரு பூஜைக்கு வரவுள்ளதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாம்.
முன்னதாக கூட்டத்தில் முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகேவேல் பேசுகையில்,
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 103வது பிறந்த நாள் விழா மற்றும் 48வது குருபூஜை விழா ஆகியவற்றை இந்த ஆண்டு பசும்பொன்னில் சிறப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் அரசின் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள விழாவில் துணை முதல்வரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என அவரிடம் கேட்ட போது, அவரும் வருவதாக தெரிவித்துள்ளார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications