திமுக மத்திய அமைச்சர் கூடத்தை புறக்கணித்த திமுக எம்.எல்.ஏக்கள்!
திருச்சி: திருச்சியில் மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தை புறக்கணித்த எம்.எல்.ஏக்கள், ஒன்றிய சேர்மன்கள் குறித்து பிரதமர், தமிழக முதல்வரிடம் புகார் தெரிவிக்க உள்ளதாக சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை மத்திய இணையமைச்சர் நெப்போலியன் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு முதல் கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என். நேரு உட்பட 8 எம்.எல்.ஏக்கள், மற்றும் ஒன்றிய சேர்மன்கள் வரவில்லை. மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலக பி.ஆர்.ஓ., பாண்டியனும் கூட வரவில்லை. ஆனால், மாநகராட்சி பி.ஆர்.ஓ. முத்துசாமி மட்டும் கலந்து கொண்டார். இதைக் கண்டு மத்திய அமைச்சர் நெப்போலியன் கடும் அதிர்ச்சியடைந்தார்.
இந் நிலையில், கூட்டத்துக்கு பின் நெப்போலியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் திட்டங்கள் முறையாக மக்களிடம் சென்றடைகிறதா என்பதை கண்டறியவே இந்த கூட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசிடம் ஏராளமான நிதிகள் உள்ளன. அதன் மூலம் கிராமங்களுக்கு தேவையான பல நல்ல திட்டங்களை நிறைவேற்றலாம்.
ஆனால், தொட்டியம் எம்.எல்.ஏ. ராஜசேகரனை (காங்கிரஸ்) தவிர மற்ற எம்.எல்.ஏக்கள், ஒன்றிய தலைவர்கள் என யாருமே வரவில்லை. இது மிகவும் வருத்தமளிக்கிறது. மக்கள் சேவையில் விருப்பு, வெறுப்பு காட்டக் கூடாது. இதே போன்று தான் கடந்த ஆண்டும் நடைபெற்றது.
தெரிந்து செய்கின்றனரா அல்லது தெரியாமல் செய்கின்றனரா எனத் தெரியவில்லை. ஆனால், கடமையை செய்ய மட்டும் தவறுகின்றனர் என்பது உண்மை.
இந்தக் கூட்டத்துக்கு வராத எம்.எல்.ஏக்கள், மற்றும் ஒன்றிய தலைவர்கள் குறித்து உரிய ஆதாரங்களுடன் தமிழக முதல்வர் கருணாநிதி, மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு கடிதம் எழுத உள்ளேன் என்றார்.
இத்தனைக்கும் அமைச்சர் நேரு நெப்போலியனின் மாமா தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications