காங்கிரஸார் போராட்டம் எதிரொலி-தங்கபாலு வீட்டுக்குப் பாதுகாப்பு

தமிழக காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக பெரும் மோதல் வெடித்துள்ளது. தங்கபாலுவின் மனைவிக்கு சென்னையில் சீட் கொடுத்தது முதல், தங்கபாலுவின் ஆதரவாளர்கள் பலருக்கு சீட் கொடுத்தது தொடர்பாக காங்கிரஸார் போராட்டங்களில் குதித்துள்ளனர்.
பல தொகுதிகளில் தங்கபாலுவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. சென்னையில் சத்தியமூர்த்தி பவன் தாக்கி சேதப்படுத்தப்பட்டது. தங்கபாலுவின் வீட்டையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
வீட்டுக்குள் புக முயற்சி
இந்த நிலையில், மகளிர் காங்கிரஸைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கபாலுவின் அடையார் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்தனர். அவர்களை போலீஸார் கலைந்து போகச் சொன்னபோது அவர்கள் திடீரென வீட்டுக்குள் புக முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவரது வீடு உள்ள தெருவில் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் மாற்றப்பட மாட்டார்கள்
இதற்கிடையே, இந்தப் போராட்டங்கள் குறித்து தங்கபாலு கூறுகையில், எந்தக் காரணத்தைக் கொண்டும் வேட்பாளர்கள் மாற்றப்பட மாட்டார்கள். கட்சித் தலைமையின் முடிவு இது. இதை ஏற்றுக் கொண்டு காங்கிரஸார் செயல்பட வேண்டும். கூட்டணியின் வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications