திமுக கூட்டணிக்கு வைகோ ஆதரவு தர வேண்டும்-ராமதாஸ்
சிதம்பரம்: திமுக கூட்டணிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆதரவு தர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், அதிமுக அணிக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது. அந்த அணித் தலைவர் ஜெயலலிதா கொள்கையை பற்றியோ, வாக்குறுதிகள் மற்றும் திட்டங்கள் பற்றியோ பேசாமல் தனிப்பட்ட முறையில் தரமற்ற விமர்சனங்களை செய்து வருகிறார். எந்த ஒரு மாநிலத்திலும் இத்தகைய அரசியல் அநாகரீகம் இல்லை.
அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பற்றி பாஜக குழுவினர் ஒரு தவறான தகவலை வெளியிட்டமைக்காக அந்த கட்சியின் மூத்த தலைவர் அத்வானி வருத்தம் தெரிவித்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார். அது அரசியல் நாகரீகம். ஆனால் இங்கே ஜெயலலிதா தனது பிரசாரத்தில் முழுக்க,முழுக்க தனிப்பட்ட விமர்சனங்களை செய்து வருகிறார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நடுநிலையோடு செயல்படுவதாக கூறி வரும் தேர்தல் ஆணையம் ஜெயலலிதா பேசுவது பற்றி கண்டு கொள்வதில்லை.
இது போதாதென்று அந்த கூட்டணியில் உள்ள நடிகர் (விஜயகாந்த்) நிதானம் இழந்து பேசி வருகிறார். அவரது வேட்பாளரை நடுவீதியில் பிரசார வேனிலேயே அடித்து உதைத்துள்ளார். கேட்டால் என்னுடைய வேட்பாளரை அடிக்க எனக்கு உரிமை உண்டு என்று கூறுகிறார்.
அந்த நடிகரை கூட்டணியில் சேர்த்ததால் பொதுமக்களின் ஆதரவு மாறி, தனக்கு பாதிப்பு வந்துவிடும் என்று இப்போது அதிமுக தலைமை பயந்து போயுள்ளதாகவும் சொல்கிறார்கள்.
தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அலை வீசுகிறது. மதில் மேல் பூனையாக இருந்த சில தொகுதிகளிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால். மாற்று அணிக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அவர்கள் ஒட்டு மொத்தமாக தேர்தல் ஆணையத்தை நம்பி இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் நடுநிலை தவறி கெடுபிடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். கேரளா, மேற்கு வங்காளம், அசாம் போன்ற மாநிலங்களிலும் தேர்தல் நடக்கிறது. அங்கு இது போன்ற தேர்தல் ஆணையம் கெடுபிடி செய்யவில்லை.
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள வைகோ, திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும் என்று விரும்பி கேட்டுக் கொள்கிறேன் என்றார் ராமதாஸ்.
பின்னர் நெய்வேலி சட்டமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் வேல்முருகளை ஆதரித்து நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,
இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வேல்முருகன் கட்சி பாகுபாடின்றி உழைக்கக்கூடியவர். கொள்கையில் தீவிர பிடிப்புள்ளவர். ஆனால், எதிரணியில் உள்ள ஜெயலலிதாவுக்கோ கொள்கையும் கிடையாது. கொள்கைக் கூட்டணியும் கிடையாது. கலைஞரைப் பற்றியும், அவர் தம் குடும்பத்தினரைப் பற்றியும் குறை கூறுவதைத்தவிர வேறேந்த கொள்கையும் கிடையாது.
6வது முறையாக கலைஞரை முதல்வராக்க நிச்சயம் முடியும். நான் செல்லும் இடங்களிலெல்லாம் கலைஞர் தான் மீண்டும் முதல்வராக வேண்டும் என ஏழை-எளியோர், பொது மக்கள் கூறுகின்றனர். எனவே கலைஞர் ஆட்சி மீண்டும் தொடர தம்பி வேல்முருகனுக்கு மாம்பழம் சின்னத்தில் முத்திரையிட்டு வெற்றிக்கனியை தாருங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications