பென்னாகரம்: தேமுதிக பிரமுகர் கொலை: திமுக தொண்டர் கைது
பென்னாகரம்: பென்னாகரம் அருகே சுவர் விளம்பரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தேமுதிக கிளைச் செயலாளர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திமுக தொண்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பென்னாகரத்தை அடுத்த பருவதனஹள்ளி தேமுதிக கிளைச் செயலாளராக இருப்பவர் அசோகன். இவரது எதிர் வீட்டில் வசிப்பவர் திமுக தொண்டரான சேகர்.
தேர்தலையொட்டி அசோகன் தன் வீட்டு சுவரில் அதிமுக ஆதரவு விளம்பரம் வரைந்திருந்தார். சேகர் திமுக சின்னத்தை வரைந்திருந்தார்.
தேர்தல் நாள் நெருங்குவதை ஒட்டி, வாக்குச் சாவடிக்கு அருகில் இருக்கும் வீட்டு சுவர்களில் வரையப்பட்ட விளம்பரங்களை 2 தினங்களுக்கு முன்னதாக அழித்துவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து அசோகன் தன் வீட்டு சுவரில் இருந்த அதிமுக விளம்பரத்தை அழித்து விட்டார். ஆனால், சேகர் விளம்பரத்தை அழிக்கவில்லை. இதையடுத்து அவரிடம் விளம்பரத்தை அழிக்குமாறு அசோகன் கூறவே, இருவருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அசோகன் சேலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து சேகர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் பென்னாகரம் தொகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications