திருப்பூர் ஆலையில் பெண் தற்கொலை: கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கு நோட்டீஸ்

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்கு நாடு முன்னேற்ற கழகம் திமுகவுடன் கூட்டணி அமைத்து 7 இடங்களில் போட்டியிட்டது.
இந்தக் கட்சியின் தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கு திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் தாராபுரத்தில் நூற்பாலைகள் மற்றும் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இங்கு வெளியூர்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். நிறுவனத்துக்குள்ளேயே அவர்கள் தங்குவதற்கு விடுதி உள்ளது.
அனுப்பர்பாளைய ஆலையில் சேலம் மாவட்டம் கெங்கவல்லி கிராமத்தை சேர்ந்த சவரியம்மாள் (25) என்ற பெண் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 14ம் தேதி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, கடும் தோல் வியாதி காரணமாக அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது.
இந்த ஆலையில் உரிய முறையில் தொழிலாளர்களின் நலன் பேணப்படாததே தற்கொலைக்குக் காரணம் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த. செல்லபாண்டியனுக்கு தொழிற்சங்கத்தினர் புகார் அனுப்பினர். புகாரின் பேரில் உரிய விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து தொழிலாளர் நலத்துறை இணை தலைமை ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், பெஸ்ட் ராமசாமியின் ஆலைகளில் சோதனை நடத்தினார். தொழிலாளர்களிடமும் விசாரணை நடத்தினார்.
விசாரணையைத் தொடர்ந்து தொழிலாளர்களின் நலனைப் பேணும் வகையில் இந்த ஆலையில் வசதிகள் ஏதும் செய்து தரப்படவிலலை என்றும், அதிக நேரம் தொழிலாளர்களை வேலை வாங்குவதாகவும் கூறி பெஸ்ட் ராமசாமி, யூனிட் மேலாளர் சார்லஸ் செல்லதுரை ஆகியோரிடம் விளக்கம் கேட்டு தொழிலாளர் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அவர்கள் அளிக்கும் பதிலைப் பொறுத்து வழக்குத் தொடரப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து பெஸ்ட் ராமசாமி கூறுகையில், அரசியல் காரணங்களுக்காக என்னை குறி வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக நினைக்கிறேன். எனது நிறுவனத்தில் 3,000 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். அனைத்து அடிப்படை வசதிகளுடன் தங்கும் விடுதி கட்டி கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications