மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: திருமாவளவன்
டெல்லி: மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்த இட ஒதுக்கீட்டை 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் சபாநாயகர் மீராகுமார் தலைமையில் நடைபெற்றது.
அதில் பேசிய திருமாவளவன், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சட்டமாக நிறைவேற்றுவதற்கு ஏற்கனவே அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், அதில் உள்ள சில முரண்பாடுகள் காரணமாக வெற்றிகரமாக அதனை சட்டமாக நிறைவேற்ற இயலவில்லை.
குறிப்பாக தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மகளிருக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஏற்பாடுகளுடன் இச்சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் இச்சட்டத்தை நிறைவேற்ற இயலாமைக்கு காரணமாக உள்ளது.
இந்தக் கோரிக்கையானது எளிதில் புறந்தள்ளக் கூடிய ஒன்றல்ல. மிகவும் இன்றியமையாத பொருத்தமான இக்கோரிக்கையை ஏற்று உறுதிப்படுத்துவதற்கு அரசு கட்டாயமாக முன்வர வேண்டும். மகளிருக்கு 33 சதவீதம் மட்டுமே வழங்குவதென ஏன், எவ்வாறு முடிவெடுக்கப்பட்டதென எனக்குத் தெரியவில்லை.
சமூக நீதியைப் பாதுகாப்பது தான் இட ஒதுக்கீட்டின் அடிப்படைக் கொள்கையாகும். இட ஒதுக்கீடு மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே உரியவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
ஆனால் நாம் எவ்வாறு இந்த 33 விழுக்காட்டை மகளிருக்கு இடஒதுக்கீடாக வரையறை செய்தோம்?. மக்கள் தொகை அடிப்படையில் 50 விழுக்காடு மகளிர் என ஒதுக்க வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன்.
இதுவே மகளிருக்குரிய உண்மையான சமூக நீதியாக அமையும். எது எப்படி இருப்பினும் வரும் மழைக்காலக் கூட்டத் தொடரில் இந்த மசோதாவை சட்டமாக நிறைவேற்றுவதற்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன்.
அனைத்துத் தளங்களிலும் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். எனவே நாடாளுமன்றத்தில் நாம் அனைவரும் இந்த மசாதோவை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம் என்றார்.
இக் கூட்டத்தில் பேசிய ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், இந்த மசோதாவில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதைக் கொண்டு வராமல் இந்த இட ஒதுக்கீட்டு மசோதாவை அமல்படுத்த முயன்றால் மகாபாரதப் போர் வெடிக்கும் என்றார்.
இதே கோரிக்கையை முன் வைத்த சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், உள் ஒதுக்கீடு இல்லாமல் இந்த மசோதாவை நிறைவேற்றுவது பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு எதிரானதாக அமையும் என்றார்.
மேலும் இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டியது மத்திய அரசு தான், அதைவிட்டு நீங்கள் ஏன் பிரச்சனையில் சிக்குகிறீர்கள் என்று சபாநாயர் மீரா குமாரைப் பார்த்து கேள்வி எழுப்பினார் லாலு.












Click it and Unblock the Notifications