கார்க் கடனை திருப்பிச் செலுத்தாத அமைச்சர் பச்சமாலை கைது செய்யக்கோரி வங்கி வழக்கு
நாகர்கோவில்: கார் கடன் வாங்கி தவணையைக் கட்டாத அமைச்சர் கே.டி.பச்சமாலை கைது செய்ய வேண்டும் என ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக வனத்துறை அமைச்சராக இருப்பவர் கே.டி. பச்சமால். கடந்த அதிமுக ஆட்சியின்போது குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் கடந்த 2.4.2005 அன்று நாகர்கோவில் ஸ்ட்டே பாங்க் ஆப் திருவிதாங்கூரில் கார் வாங்குவதற்காக ரூ.5 லட்சத்து 75 ஆயிரத்து 237 கடன் வாங்கி இருந்தார். கடன் வாங்கியதற்கான தவணைத் தொகை சரிவர கட்டப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து வங்கி அதிகாரிகள் நாகர்கோவில் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 22.1.2011 அன்று வழக்கை விசாரித்த நீதிபதி வங்கியில் வாங்கிய தொகை, வட்டி மற்றும் நீதிமன்ற கட்டணம் என ரூ. 7 லட்சத்து 38 ஆயிரத்து 141ஐ உடனே கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் அவர் அந்த பணத்தை கட்டவில்லை.
இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டும் கடனை திரும்ப செலுத்தாததால் கடன் தொகையை வசூல் செய்திட அவரை கைது செய்து திருச்சியில் உள்ள உரி்மையியல் சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் என வங்கி சார்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.












Click it and Unblock the Notifications