அதிமுகவுக்காக அஷ்டமி, நவமியில் உள்ளாட்சித் தேர்தல்- ராமதாஸ்

நிருபர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அஷ்டமி, நவமி நாட்களை பார்த்து அறிவிக்கப்பட்டு உள்ளன. தேர்தல் அட்டவணை அறிவித்த முறையை பார்க்கும்போது அதிமுகவுக்கு ஆதரவாக மாநில தேர்தல் கமிஷன் செயல்படுவது தெளிவாகத் தெரிகிறது.
தமிழகத்தில் எந்தப் பதவிகளில் போட்டியிட ஆதி திராவிடர்கள், பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்பதை அறிவிக்கும் முன்பாகவே வேட்பு மனு தாக்கல் செய்யும் தேதியை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
அறிவிப்பு வந்த 14 மணி நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதை தொடங்கலாம் என்று கூறியிருப்பது தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாகும். பஞ்சாயத்து ராஜ் சட்டம் அமலுக்கு வந்த பிறகு 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. அப்போதெல்லாம் தேர்தல் அறிவிப்பு வெளியான ஒரு வாரத்திற்கு பிறகுதான் மனு தாக்கல் செய்யும் பணிகளை தொடங்கினார்கள்.
மேலும் உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். எனவே, வேட்பு மனுத் தாக்கலை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும். அப்போதுதான் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியும்.
மத்திய அரசின் சார்பில் ஏழைகளுக்கு எதிராக ஒரு அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். நகர் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.32 ம், கிராம பகுதிகளில் ரூ.26 ம் செலவு செய்பவர்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் என்று அதில் உள்ளது. மத்திய திட்டத்துறையின் இந்த கணக்கு ஏழைகளை மையமாக வைத்து நடத்தப்படும் ஒரு கேலிக் கூத்து. எனவே அந்த தகவல்களை திரும்ப பெற வேண்டும்.
தமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தொடங்கும் முன்பே பெரும்பாலான இடங்களில் ஆட்களை பணியிட மாற்றம் செய்திருப்பதை ரத்து செய்து புதிதாக கவுன்சிலிங் நடத்த வேண்டும்
எங்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் வேலுவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுடன் பேச்சுவார்த்தை நடத்தி 2 கட்சிகளும் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளோம். ஆனால் தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக இணைந்து போராடுவோம்.
தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட வேண்டும் என்று 10 ஆண்டுகளாக கூறி வருகிறேன். அதுபோல போட்டியிட்டு கட்சிகள் வாங்கும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் உறுப்பினர்களை தேர்வு செய்வது போல தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என்றார்.
ராமதாசுடன் ஜான்பாண்டியன் சந்திப்பு:
இந் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸை தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் இன்று காலை சந்தித்துப் பேசினார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என பாமக வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications