களக்காடு மலையில் காட்டுத் தீ: தீயை அணைக்க போராட்டம்
களக்காடு: களக்காடு மலையில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள புலிகள் காப்பகத்தில் இதுவரை மழை பெய்யவில்லை. இதனால் வனப்பகுதியில் நீர் நிலைகள் வறண்டு வறட்சி ஏற்பட்டுள்ளது. மரங்கள் கருகிய நிலையில் காட்சியளிக்கின்றன. கடும் வெப்பமும் நிலவி வருகிறது. இதையடுத்து தீ விபத்தை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர். மலைப் பகுதியில் ஆங்காங்கே தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டன. மேலும் 24 மணி நேரமும் வனத்துறை ஊழியர்கள ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று மதியம் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட தெற்கு வீரவநல்லூர் பீட் பகுதியில் திடீர் என காட்டுத் தீ பரவியது. இது குறித்து தகவல் அறிந்த புலிகள் காப்பக கள இயக்குனரும், தலைமை வன பாதுகாவலருமான மல்லேசப்பா உத்தரவின் பேரில் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்று வேகமாக வீசுவதாலும், வனப்பகுதி மழை இல்லாமல் கருகிய நிலையில் இருப்பதாலும் தீ மற்ற பகுதிகளுக்கும் மளமளவென பரவி வருகிறது. நேற்று இரவு வீரவநல்லூர் தெற்கு பீட் பகுதியில் பிடித்த தீ வடகரை பீட்டுக்கும் பரவியது.
கீரைக்காரன்தொண்டு பகுதி வரை தீ கொளுந்து விட்டு எரிகிறது. தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் அம்பை, களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீ எரியும் பகுதியி்ல் தண்ணீர் இல்லாததால் வனத்துறையினர் கடு்ம் சிரமம் அடைந்துள்ளனர். மரக்கிளைகளை வைத்து அடித்தும், கற்கள், மண்ணை அள்ளி போட்டும் தீயை கட்டுக்குள் கொண்டு வர கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications