ஏழைகளுக்காக கஷ்டப்படுகிற ஒரே தலைவர் கேப்டன் சார்தான்-தேமுதிக தொண்டர்கள்
சென்னை: ஏழைகளுக்காக கஷ்டப்படுகிற ஒரே தலைவர் கேப்டன் சார்தான். அடுத்த எம்.ஜி.ஆர். என்றால் அவரைத்தான் சொல்ல முடியும் என்று தேமுதிக தொணடர்கள் கூறியுள்ளனர்.
பஸ் கட்டணம், பால் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தேமுதிகவினர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். சென்னையில் விஜயகாந்த் உண்ணாவிரதம் இருந்தார்.
இந்த நிலையில் உண்ணாவிரதம் நடைபெறும் பகுதியில் ஏராளமான தேமுதிகவினர் திரண்டுள்ளனர்.மேலும் பொதுமக்களும் வேடிக்கை பார்ப்பதற்காக அப்பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
அப்போது தொண்டர்கள் சிலர் கூறுகையில், கையில் காசு இருப்பவர்கள் எவ்வளவு விலை உயர்த்தினாலும் பஸ்சில் போக முடியும். இல்லாதவங்கள் என்ன செய்ய முடியும். அவர்கள் எப்படி பஸ்சில் போக முடியும்.
பஸ்சில் ஏறினாலே இப்போது 15 ரூபாய் வரை ஆகி விடுகிறது. போக வர 30 ரூபாய் ஆகிறது. இதை எப்படி ஏழைகள் தாங்க முடியும். நான் இந்த இடத்திற்கு வர 40 ரூபாய் கொடுத்து வந்தேன். திரும்பிப் போக 40 ரூபாய் ஆகும். ஒரு நாளைக்கு இப்படி 80ரூபாயை பஸ்ஸுக்கே கொடுத்தால் நான் எப்படி குடும்பத்தை நடத்த முடியும் என்றார் ஒருவர்.
இன்னொருவர் கூறுகையில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் கூட இந்த விலை உயர்வை சமாளிக்க முடியாது. சாப்பிடக் கூட கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு இது மேலும் சிரமத்தையே தரும்.
ஐயா ஆட்சிக்கு வந்தா அதைத் தர்றேன், இதைத் தர்றேன் என்று கூறி ஓட்டை வாங்கிக் கொண்டு மக்களை மறந்து விடுகிறார். இந்தம்மாவும், கிரைண்டர் தர்றேன், பேன் தர்றேன், ஆடு தர்றேன், மாடு தர்றேன் என்று கூறி ஓட்டு வாங்கினார். ஆனால் இப்போது மக்களை மறந்து விட்டார்.
கேப்டன் சார் மட்டும்தான் ஏழைகளுக்காக போராடுகிற ஒரே தலைவராக இருக்கிறார். அடுத்த எம்.ஜி.ஆர். என்றால் அது கேப்டன் சார்தான் என்றார்.












Click it and Unblock the Notifications