மழை: சென்னை மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?- மேயர் துரைசாமி விளக்கம்
சென்னை: மழை நிவாரணம் மற்றும் சேதமடைந்த சாலைகள் மேம்பாடு உள்ளிட்டவை தொடர்பாக சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் குறித்து மேயர் சைதை துரைசாமி ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து சைதை துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அவர்களின் உத்தரவின்பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன.
4 வெள்ள நிவாரண மையங்கள் மூலமாக மழைக்காலங்களில் உணவுப் பொட்டலங்கள் தயாரித்து வழங்கும் பணி பேசின்பாலம் சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஐயா தெரு மற்றும் கோபாலபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு 2000 நபர்களுக்கு உணவு தயாரிக்கும் வகையில் பணி நடைபெற்று வருகிறது. நேற்று மட்டும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 42,500 ஆயிரம் நபர்களுக்கு உணவு தயாரிக்கப்பட்டும், 9000 பிரெட்டுகளும் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இன்றும் தொடர்ந்து உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியில் தற்போது 12 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து இயங்கி வருகிறது. இதில் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, எருக்கஞ்சேரி, பெரம்பூர், கணேசபுரம், ஹாரிங்டன், நுங்கம்பாக்கம், கங்கு ரெட்டி, மேட்லி, துரைசாமி, சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை, பஜார் சாலை, அரங்கநாதன் சுரங்கப்பாதை ஆகிய 12 சுரங்கப்பாதைகளில் 60 பம்ப் செட் மூலமாக இரவு பகலாக மழைநீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இது மட்டுமல்லாமல் கைலாச தெரு, கணேசபுரம் சுரங்கப்பாதை, ராஜாஜி நகர், புல்லாபுரம், கல்கி நகர் ஆகிய தண்ணீர் தேங்கும் பகுதிகளில் 50 எச்.பி. மோட்டார் பம்ப் செட் வைத்து மழைநீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.
மேலும் சென்னை மாநகராட்சியின் பழைய 10 மண்டலங்களிலும் 88 பம்ப்செட் மூலமாக தண்ணீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. இதே போன்று இணைக்கப்பட்டுள்ள விரிவாக்கப் பகுதிகளில் தண்ணீர் விரைவாக வழிந்தோட திருவெற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், மதுரவாயல், ஆலந்தூர், உள்ளகரம், சோழிங்கநல்லுhர் ஆகிய பகுதிகளில் 12 பம்ப் செட்டுகளும், 34 ஜே.சி.பி இயந்திரங்களும் 3 கழிவுநீர் அகற்ற உபயோகப்படுத்தப்படும் லாரிகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுபோல், வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக தண்டையார்பேட்டை, ராயபுரம், எம்.கே.பி.நகர், சத்தியமூர்த்தி நகர், ரங்கராஜபுரம், டிரஸ்ட்புரம், சைதாப்பேட்டை, பட்டினம்பாக்கம், திருவான்மியூர் உள்பட 33 பகுதிகள் கண்டறியப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கூடுதலாக மழை வரும் பட்சத்தில் தனியார் கல்யாண மண்டபங்கள் மற்றும் சமூக நலக்கூடங்கள் சுமார் 54 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அப்பகுதியில் பொதுமக்களை தங்க வைக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மரம் விழுந்துள்ள இடங்களில் அவற்றினை அகற்றுவதற்கு மற்றும் அறுப்பதற்கு ரிப்பன் கட்டடத்திலும் 10 பழைய மண்டலங்களிலும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறை சார்பில் ஒவ்வொரு கோட்டத்திலும் சுகாதார ஆய்வாளர்களால் குடிநீரில் குளோரின் அளவு பரிசோதிக்கப்பட்டு, குளோரின் இல்லாத இடங்களில் ஒவ்வொரு மண்டலத்திற்கு மூன்று லட்சம் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சென்னை மாநகராட்சியின் பழைய 10 மண்டலங்களில் 34 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 3372 பேர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு இடங்களிலும் பினாயில், பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணியினை 10 குழுக்கள் மருத்துவ முகாம்களுடன் இணைந்து செயல்படுகின்றன என்று தெரிவித்துள்ளார் துரைசாமி.












Click it and Unblock the Notifications