7ம் தேதி முதல் நாடாளுமன்றம் சுமூகமாக நடக்கும்: பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை
டெல்லி: வரும் 7ம் தேதி முதல் நாடாளுமன்றம் சுமூகமாக நடக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 22ம் தேதி துவங்கியது. துவங்கிய நாளில் இருந்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் முடங்கிப்போயுள்ளன.
2ஜி ஊழல், தெலுங்கானா விவகாரம், கருப்புப் பணம், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு உள்ளிட்ட விவகாரஙகளால் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அரசும் தனது பிடிவாதத்தைக் கைவிடுவதாகத் தெரியவில்லை.
கடந்த 2ம் தேதி நாடாளுமன்றம் கூடியதும் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டதால் அவை வரும் 7ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில் டெல்லியில் நடந்த கடற்படை தின விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், 4 நாட்களுக்குப் பின் நாடாளுமன்றம் வரும் 7ம் தேதி கூடுகிறது. அன்றில் இருந்து இரு அவைகளும் சுமூகமாக நடக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார்.
குளிர்கால கூட்டத் தொடர் வரும் 22ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆயினும் இது வரை எந்த வித பணிகளும் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படவில்லை. இந்த கூட்டத் தொடரின் பாதி நாட்கள் வீணாகிவிட்டன. தொடர் புறக்கணிப்புகள் காரணமாக கடந்த 2ம் தேதி முதல் இதுவரை அரசுப் பணம் ரூ. 30 கோடிக்கும் மேல் வீணாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications