இனி இந்து சமய அறநிலையக் கோவில்களில் வடை, பாயாசத்துடன் அன்னதானம்!!
சென்னை: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் வரும் கோவில்களில் தற்போது வழங்கப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்தை விரிவுபடுத்தி கூடுதலாக வடை, பாயாசமும் வழங்கவுள்ளனர்.
இந்த வடை, பாயாசம், வெள்ளிக்கிழமைகள் மற்றும் பிரதோஷம் உள்ளிட்ட விசேஷ சிறப்பு நாட்களில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திருக்கோவில் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்தத் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 63 கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு தற்போது 300க்கும் மேற்பட்ட கோவில்களில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
திமுக ஆட்சிக்காலத்தின்போது இது சரிவர கவனிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், திட்டத்தில் சிறிய மாற்றம் செய்து அதை புதுப் பொலிவுடன் அமல்படுத்துகிறது தமிழக அரசு.
அதன்படி, அரிசி சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டுப் பொறியல், அப்பளம் மற்றும் ஊறுகாய் ஆகிய வழக்கமான உணவுடன், வெள்ளி மற்றும் விசேஷ தினங்களில் கூடுதலாக வடை, பாயாசம் ஆகியவையும் இணைத்து தரப்படும்.
கூடுதலாக வடை, பாயாசத்தை சேர்த்துள்ளதால் அன்னதானத் திடடத்திற்கான செலவும் அதிகரித்துள்ளது. தற்போது சாப்பாடு ஒன்றுக்கு ரூ. 20 வரை செலவாகி வருகிறது. இது தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.
புதிய திட்டத்தின் இன்னொரு அம்சமாக இதுவரை இருந்து வந்து 362 கோவி்ல்கள் என்பது 468 கோவில்களாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இனிமேல் தரையில் உட்கார்ந்து சாப்பிடத் தேவையில்லை. மாறாக சேர், டேபிள் போட்டு ராஜ உபசாரம் அளிக்கப்படவுள்ளது. இதற்காக கோவிலக்ளுக்கு சேர், டேபிள்களும் வழங்கப்பட்டுள்ளன. பொங்கல் முதல் இந்த டேபிள், சேர் திட்டம் அமலுக்கு வருகிறதாம்.












Click it and Unblock the Notifications