காதலியை பதிவு திருமணம் செய்துவிட்டு, கல்லூரி விரிவுரையாளரை மணக்க முயன்றவர் கைது
சென்னை: காதலியை ரகசியமாக பதிவு திருமணம் செய்துவிட்டு, சென்னையை சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் உடன் திருமண நிச்சயம் செய்து கொண்ட இன்ஜினியர் மணமகனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வாசுதேவன் என்பவரது மகள் சுபா(24). எம்.இ. பட்டதாரியான இவர் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக உள்ளார். இவருக்கும், மதுரை வடக்கு ஆவணி மூலவீதியை சேர்ந்த ராமசாமி மகன் ராஜேஷ்(28) என்பவருக்கும் கடந்த 11ம் தேதி திருமண நிச்சயம் செய்யப்பட்டது.
காற்றிலை மின் நிலையத்தில் முதுநிலை பொறியாளராக பணியாற்றி வந்த ராஜேஷ், ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை சுபா அறிந்து கொண்டார். இதனையடுத்து ஸ்ரீரங்கம் போலீசாரிடம் சுபா புகார் அளித்தார்.
இது குறித்து சுபா அளித்த புகாரில் கூறியிருப்பதாவது,
என்னுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ராஜேஷ் செல்போனில் பேசிய போது, சென்னை சேர்ந்த சுஜிதா என்ற பெண்ணை கடந்த 31.10.2011 அன்று சாலவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.
எனவே எனக்கும், ராஜேஷூக்கும் இடையே நாளை நடக்க உள்ள திருமணத்தை தடுத்த நிறுத்த வேண்டும். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த அவர் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மரகதம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கடந்த 6 ஆண்டுகளாக ராஜேஷ், சுஜிதாவை வீட்டுக்கு தெரியாமல் காதலித்து வந்ததும், பெற்றோருக்கு தெரியாமல் அவரை திருமணம் செய்ததும் உண்மை என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து ராஜேஷை கைது செய்து செய்த போலீசார், அவரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சுபாவை திருமணம் செய்ய ஆதரவாக இருந்த ராஜேஷின் தந்தை ராமசாமி(60), தாயார் கண்ணம்மாள்(56), சகோதரர் யஷ்வந்த்(24) உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications