இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன், நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது: நடராஜன்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன், நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது என்று முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் கூறினார்.

தஞ்சாவூரில் நடராஜன் மருதப்பா அறக்கட்டளை சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழர் கலை இலக்கிய விழா நடத்தப்படுகிறது. போயஸ் கார்டனிலிருந்து சசிகலா குடும்பத்தினர் விரட்டப்பட்ட நிலையில் தஞ்சையில் இந்த விழா நடந்தது.

விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனும் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் நடராஜன் பேசுகையில்,

இந்த விழாவுக்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ண மோகன்ஜி வந்துள்ளார். இது போல், இந்தியா முழுவதும் உள்ள என் நண்பர்களை அழைத்தால் தாங்க மாட்டார்கள், இனிமேல் அனைவரையும் அழைப்பேன்.

நான் ஒரு கட்டுப்பாடற்ற தலைவன். இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். ஒன்று பழ.நெடுமாறனுக்கு கட்டுப்படுவேன்; இரண்டாவது என் மனைவிக்கு கட்டுப்படுவேன்.

தன் மகள் திகார் சிறையில் இருந்து விடுபட, முல்லைப் பெரியாறு பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க கருணாநிதி தயங்குகிறார். காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு, இலங்கைத் தமிழர் பிரச்சனை என அனைத்து பிரச்சனைகளிலும், தமிழகத்துக்கு காங்கிரஸ் துரோகம் இழைத்துள்ளது.

கருணாநிதி, காங்கிரஸ் உறவை விலக்கிக் கொண்டால் தமிழகம் வாழ்த்தும், இல்லையென்றால் உங்களை வீழ்த்தும்.

நீங்கள் (நடராஜன் ஆதரவாளர்கள்), 'முடிவெடு' என்கிறீர்கள். நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது, நான்தான் ஆட்சியை மாற்றினேன். அதை மாற்றியது மக்கள். மக்கள் சக்தியை திரட்டினால் மாற்றம் வரும். வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அது எதிரொலிக்கும்.

முடிவு எடுத்துவிடலாம். அதனால், தமிழகத்தின் பொது நலனுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. என் மனைவி மீது வழக்கு உள்ளது; வாக்களித்த மக்கள் என்னை நம்பி இருக்கிறார்கள். உலகத் தமிழர்கள் என்னை நம்பியிருக்கிறார்கள். அதனால், பொறுமையாக இருக்கிறேன்.

தற்போதுள்ள இடர்பாடுகளை பார்த்து, யாரும் அச்சப்பட வேண்டாம். மற்றவர்களை போல் பொறுப்பற்ற முறையில் என்னால் பேச முடியாது; அவசரப்பட முடியாது.

"என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே... இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே!'.

இந்தியாவில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அது எப்போது என்பதை பழ. நெடுமாறன் அறிவிப்பார்.

என்னை நம்பியோருக்குச் சரியான நேரத்தில், சரியாக வழிகாட்டுவேன். இங்கு திரண்டிருக்கும் கூட்டம், எனக்கு ஏற்பட்டுள்ள இடர்ப்பாடுகள் குறித்த அச்சத்தை நீக்குவதாக உள்ளது என்றார் நடராஜன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+