லஞ்சம் தராமல் அரசு பணியில் சேரும் நிலையை உருவாக்குவேன்-புதிய டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜ்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து, உறுப்பினர்கள் 13 பேர் வீடுகளில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
மேலும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள், புதிதாக பணியில் சேர்ந்த ஊழியர்கள், புரோக்கர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து செல்லமுத்து கடந்த வாரம் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக புதிய டிஎன்பிஎஸ்சி தலைவராக ஓய்வுபெற்ற டி.ஜி.பி. நடராஜை முதல்வர் ஜெயலலிதா நியமித்தார்.
அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் நிருபர்களிடம் நட்ராஜ் பேசுகையில், அரசு என் மீது நம்பிக்கை வைத்து மிக முக்கியமான இந்த பணியை தந்துள்ளது. அதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசுப் பணி என்பது தெய்வீக பணியாகும். அந்தப் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அரசுப் பணியில் சேர திறமை இருக்க வேண்டும். பணியில் சேர்பவர்கள் நேர்மையாக செயல்பட வேண்டும். திறமையும் நேர்மையும் மிக்கவர்கள் அரசு பணியில் சேரும் சூழ்நிலையை உருவாக்குவேன்.
நான் முதலில் செய்யப்போவது நாணயம் பெறாத நாணயமான சேவை. தேர்வாணையத்தில் உடனடியாக நிறைய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். டிஎன்பிஎஸ்சி தேர்வு பற்றி ஒரு புகை மண்டலம் சூழ்ந்து நிற்கிறது. அந்த புகை மண்டலம் அகற்றப்படும்.
வெளிப்படையான நிர்வாகத்தைத் தருவேன். டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறும் அறைகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். நேர்முகத் தேர்வின்போதும் கேமரா பொருத்தப்படும். ஆட்சேபனை இருப்பவர்கள் அதை பார்வையிட அனுமதி வழங்கப்படும்.
ஒவ்வொரு தேர்வும் முடிந்தவுடன் அந்த தேர்வுக்குரிய விடைகள் இணையத்தளத்தில் உடனடியாக வெளியிடப்படும். அந்த விடைகள் பற்றி தேர்வு எழுதியவர்கள் குறைபாடுகளை சுட்டிக்காட்டினால் வல்லுனர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட விடைகள் 7 நாட்களுக்குள் வெளியிடப்படும்.
தேர்வு எழுதியவர்கள் திருத்தப்பட்ட விடைத்தாள்களை பார்ப்பதற்கும் அனுமதிக்கப்படுவர்.
ஆண்டுதோறும் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள பல்வேறு தேர்வுகள், தேர்வு முடிவுகள், வெளியாகும் உத்தேச தேதி ஆகியவற்றை உள்ளடக்கிய கால அட்டவணை வெளியிடப்படும்.
அரசுப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிப் பொறுப்புகளை கருத்தில் கொண்டு தேர்வுக்கான பாட திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படும். தேர்வு முறையில் உரிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும்.
தேர்வாணையத்தின் செயல்பாடுகள், பணிகளுக்கான விதிகள், பாடமுறை, மாதிரி விடைத்தாள்கள், முந்தைய வருட வினாத்தாள்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சில சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். லஞ்சம் கொடுக்காமல் நேர்மையாக அரசுப் பணியில் சேர முடியும் என்ற நம்பிக்கையை இளைஞர் சமுதாயத்துக்கு கொடுப்போம்.
நேர்மையாக படித்தால் நல்ல முறையில் தேர்வு எழுதினால் அரசுப் பணியில் சேர வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையை இளைஞர்களுக்கு கொடுப்பேன். எந்த தவறும் நிகழ விடமாட்டேன். தவறுகளை தட்டிக்கேட்பேன் என்றார் நடராஜ்.












Click it and Unblock the Notifications