+2 தேர்வில் காப்பி அடித்தால் நிரந்தரமாக தேர்வு எழுத முடியாது- தேர்வுத்துறை எச்சரிக்கை
சென்னை: +2 தேர்வில் காப்பி அடித்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு சிக்கும் மாணவ, மாணவர்கள் நிரந்தரமாக தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
மார்ச் 8ம் தேதி முதல் 30ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுசேரியில் +2 தேர்வு நடைபெற உள்ளது. இதில் 7 லட்சத்து 63 ஆயிரத்து 71 மாணவ, மாணவியர் பங்கேற்று தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 2,000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வினாத்தாள்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும், தேர்வில் மாணவ, மாணவியர் யாரும் காப்பி அடிக்காமலும் தேர்வை வெற்றிகரமாக நடத்துமாறும், அரசு தேர்வுகள் இயக்குனரகம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு தேர்வு அறையில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்ட மாணவர்களுக்கு 2 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு காப்பி அடித்தல், மற்றவரின் விடைத்தாளை வாங்கி பார்த்து எழுதுதல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் நிரந்தரமாக தேர்வு எழுத முடியாது என்று அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேர்வு மையத்தில் முறைகேடு நடப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அது தனியார் பள்ளிகளாக இருந்தால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, குறிப்பிட்ட பள்ளித் தேர்வு மையத்தில் இருந்து நீக்கப்படும் என்றும் தேர்வுத்துறை இயக்குனரகம் எச்சரித்துள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் +2 தேர்வை சிறப்பாக நடத்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் சென்னை மாவட்டத்தின் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கே.ஏ.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை மாவட்டத்தில் மொத்தம் 138 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 50,293 மாணவ, மாணவியர் +2 தேர்வு எழுத உள்ளனர். முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி தலைமையில் 6 பறக்கும் படைகளும், மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் 14 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
சப்- கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகளும் தேர்வு மையங்களை கண்காணிக்கும். வினாத்தாள் கட்டுப்பாட்டாளர்கள், பறக்கும் படை உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 2,800 பேர் தேர்வுப் பணியில் ஈடுபட உள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications