காதலை மறக்கச் சொன்ன கல்லூரி மாணவியைக் குத்திக் கொன்ற காதலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளியில் படிக்கையில் காதலித்தவள், கல்லூரிக்கு சென்றவுடன் மறுத்ததால் ஆத்திரமடைந்த காதலன் அவளை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை பத்ரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ரவி (46). டெய்லர். அவரது மனைவி பத்மா (38). அவர்களுக்கு சங்கீதா (18), சசிகலா (15). என்று 2 மகள்கள். அதில் சங்கீதா எழும்பூரில் உள்ள காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. தாவரவியல் முதலாண்டு படித்து வந்தார். கல்லூரி முடிந்து வந்ததும் மாலை நேரத்தில் அதே பகுதியில் உள்ள பேன்ஸி ஸ்டோரில் மாதம் ரூ.3,000 சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார். தான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து கல்லூரி கட்டணம் செலுத்தி வந்தார்.

அவரது வீட்டு மாடியில் உள்ள அறையில் பெரம்பலூர் மாவட்டம் தொழுதூர் கிராமத்தைச் சேர்ந்த மணி (26) என்பவர் தங்கியிருந்தார். பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். அவர் அதே பகுதியில் உள்ள பிரியாணி கடையில் மாஸ்டராக வேலை பார்க்கிறார். அவருக்கும், சங்கீதாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

கடந்த 10 நாட்களாக சங்கீதா மணியுடன் பேசவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் ஒழுங்காக பேசவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு சங்கீதா பேன்ஸி கடையில் இருந்து வீட்டுக்கு வந்தார். அவர் வரும் வழியில் காத்திருந்த மணி அவரைப் பார்த்தவுடன் ஏன் என்னுடன் பேச மாட்டேன் என்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு சங்கீதா இனி உன்னுடன் பேசமாட்டேன். என்னை மறுந்துவிடு என்று தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு ஆத்திரமடைந்த மணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சங்கீதாவின் மார்பில் குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது அலறல் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தேனாம்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கீதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தனது அறையில் ஒளிந்திருந்த மணியை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மணி அளித்த வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது,

அதிகம் படிக்க விரும்பினேன். வறுமை காரணமாக 10ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. இதனால் உள்ளூரில் கூலி வேலை செய்ய தயக்கம் ஏற்பட்டது. எனவே, சென்னை வந்து வேலை தேடலாம் என்று முடிவு செய்தேன். அதன்படி 5 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை வந்தேன். கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் கணேஷ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் மேல் தளத்தில் தனி அறையில் தங்கினேன். என்னுடன் தம்பி பெருமாளும் தங்கினான். ஓரளவு சமைக்க தெரியும் என்பதால் வீட்டு பக்கத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் வேலைக்கு சேர்ந்தேன். நாளடைவில் பிரியாணி மாஸ்டராக உயர்ந்தேன். சம்பளமாக ரூ.3000 கிடைத்தது. வீட்டின் கீழ் தளத்தில் சங்கீதா இருந்தார். முதல் பார்வையிலேயே காதல் வயப்பட்டுவிட்டேன். சங்கீதா எல்லோரிடமும் கலகலப்பாக பேசுவார். பழகுவார். அவரது இந்த சுபாவம், அவர் மீதான காதலை மேலும் அதிகரித்தது. ஒரு தலையாக காதலித்து வந்தேன். பின்னர், எனது காதலை வெளிப்படுத்தினேன். முதலில் தயங்கிய சங்கீதா, பின்னர் காதலை ஏற்றுக் கொண்டார். நேரிலும் போனிலும் அடிக்கடி பேசுவோம். கல்லூரியில் சேர்ந்த பிறகு என்னுடன் பேசுவதை படிப்படியாக குறைத்துவிட்டார். கடந்த 14ம் தேதி காதலர் தினத்தன்று அவருக்காக பரிசுப் பொருள் வாங்கி காத்திருந்தேன். அவர் என்னுடன் பேசவும் இல்லை. பரிசுப் பொருளை வாங்கவும் இல்லை. இது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியது. அவருடன் பேச பல முறை முயன்றும் முடியவில்லை.

பள்ளி மாணவியாக இருந்தபோது காதலித்தவள், கல்லூரிக்கு சென்றதும் காதலிக்க மறுக்கிறாளே என்ற ஆத்திரம் எனக்குள் ஏற்பட்டது. என்னை காதலிக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று நினைத்தேன். எனக்குள் என்னை அறியாமலேயே ஒரு வெறி ஏற்பட்டது. காதலை ஏற்றால் அவளை உயிரோடு விட்டுவிட வேண்டும். மறுத்தால் தீர்த்துக் கட்டிவிட வேண்டும் என்று திட்டமிட்டேன். அதன்படி ஒரு கத்தியை தயார் செய்தேன். வழக்கமாக பணியை முடித்து விட்டு இரவு 9.30 மணிக்கு சங்கீதா வீடு திரும்புவார். அவரை எதிர்பார்த்து நேற்று முன்தினம் இரவு கத்தியுடன் காத்திருந்தேன்.

மெதுவாக வந்த சங்கீதா என்னை பார்த்தவுடன் தலை குனிந்து வேகமாக வீட்டுக்குள் நுழைய முயன்றார். அவரை தடுத்து நிறுத்தினேன். என்னுடன் ஏன் பேச மறுக்கிறாய்? என்னை பிடிக்கவில்லையா? உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். என்னை ஏற்றுக்கொள் என்று அவளிடம் மன்றாடினேன். ஆனால் அவளோ என்னை மறந்து விடு, என் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத் தான் மணப்பேன் என்று என்னை உதாசினப்படுத்தினாள். இதனால், கோபமடைந்து கத்தியால் சங்கீதாவை குத்திவிட்டேன். அவள் இறந்ததை கண்டதும் எனக்கே அழுகை வந்தது. காதலியை அநியாயமாக கொலை செய்து விட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+