உண்மை வரலாறுகளை தமிழருக்கு நினைவுபடுத்தும் திராவிட இயக்க 100ம் ஆண்டு விழா- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: உண்மை வரலாறுகளை தமிழர்களுக்கு நினைவுபடுத்தும் விழாதான் திராவிட இயக்க 100ம் ஆண்டு விழா என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

திராவிடர் இயக்கம்

திராவிட இயக்க 100ம் ஆண்டு தொடக்க விழா 27-2-2012 அன்று நமது தலைமைக் கழகத்தின் சார்பாக சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் மாலை 5 மணியளவில் கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரையாற்றிட, எனது தலைமையில், நமது பேராசிரியர் முன்னிலையில் நடைபெறும்.

அந்தத் தொடக்க விழாவில் கி.வீரமணி, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மோகன், பேராசிரியர் நன்னன், சுப.வீரபாண்டியன் உரையாற்றவுள்ளனர். திராவிட இயக்கத்தின் தோற்றம் குறித்தும், அதன் மேன்மை பற்றியும் விளக்கிடவிருக்கிறார்கள்.

'ஒருவன் உள்ள வரையில் - குருதி ஒரு சொட்டு உள்ளவரையில் திராவிட நாட்டின் உரிமைக்குப் போரிடச் சிறிதும் பின்னிடல் இல்லை!' என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.

முதன்முதலாக உபயோகித்தவர்

1856ல் 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற அரிய ஏட்டை எழுதிய ராபர்ட் கால்டுவெல் என்ற மொழி நூல் அறிஞர்தான், திராவிட மொழி பேசும் மக்கள் ஒரே இனத்தவர் என்று குறிப்பிட்டார். தென்னிந்திய மொழிகளையும், அவற்றைப் பேசும் மக்களையும் குறித்து எழுதிய போது, 'திராவிடர்' என்ற பெயரை அவர்தான் முதன்முதலாக உபயோகித்தார் என்ற குறிப்புகளும் உள்ளன.

தமிழுக்குத் தொண்டாற்றி ஒப்பிலக்கணம் தந்த அந்த கால்டுவெல் வாழ்ந்து மறைந்த இடையன்குடி இல்லத்தை நினைவு இல்லமாக ஆக்கிட கழக ஆட்சியிலேதான் ரூ.18.50 லட்சம் ஒதுக்கீடு செய்து 4-2-2010 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி அந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டு, கால்டுவெல் மார்பளவு வெண்கலச் சிலையும் நிறுவப்பட்டு - 17.2.2011 அன்று காணொலிக் காட்சி வாயிலாக என்னால் திறந்து வைக்கப்பட்டன.

மனோன்மணியம் எழுதிய பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, தனது 'நீராருங் கடலுடுத்த' பாடலில் 'திராவிடநல் திருநாடு' என்று குறிப்பிட்டுள்ளார். சுந்தரம் பிள்ளையின் காலம் 1855 முதல் 1897 ஆகும். 1912ம் ஆண்டு தோன்றிய அமைப்பான சென்னை ஐக்கிய சங்கம் என்ற மெட்ராஸ் யுனைட்டெட் லீக் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழா 1913-ம் ஆண்டு டாக்டர் நடேசனாரின் மருத்துவமனைத் தோட்டத்திலே நடைபெற்றபோது, சங்கத்தின் பெயர் அதன் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை, எனவே அந்தப் பெயரை மாற்ற வேண்டுமென்று ஒருசிலர் பேசிய நிலையில்தான், பெயரை எப்படி மாற்றலாம் என்று சில கருத்துக்கள் கூறப்பட்டன. அப்போது டாக்டர் நடேசனார் தான், 'நமக்கென்று ஓர் இனம் இல்லையா? அதற்கென்று ஒரு பெயர் இல்லையா?' என்று கேட்டு, திராவிடச் சங்கம் என்று பெயர் மாற்றலாம், ஏனென்றால் நாமெல்லாம் திராவிடர்களாயிற்றே?' என்று முடிவினைத் தெரிவித்தார். அந்த முடிவினை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டார்கள்.

தியாகராயர் - டி.எம்.நாயர்

டாக்டர் நடேசனாரின் கவனத்தை அந்த நேரத்தில் கவர்ந்தவர்களாக வெள்ளுடை வேந்தர் தியாகராயரும், டாக்டர் டி.எம்.நாயரும் இருந்தார்கள்.

தியாகராயர் 1917-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண முதலாவது நீதிக்கட்சி மாநாட்டில் உரையாற்றும்போது, 'பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று. திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத்துதித்தோர் யாம் என்று பெருமை பேசினாரில்லை. பிறப்பினால் ஏற்றத்தாழ்வு கற்பித்தோரும் நால்வகைச் சாதி இந்நாட்டில் நாட்டினோரும் ஆரியரே. அவ்வருணாச்சிரமக் கோட்டையை இடித்தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்தர் முயன்றார், முடியவில்லை! பின்னர் வந்த பற்பல சீர்திருத்தவாதிகள் முயன்றனர், தோற்றனர். ராமானுசரும் புரோகிதக் கொடுமைகளைக் களைந்தெறிய ஒல்லும் வழியெல்லாம் முயன்றார், தோல்வியே கண்டார்! தீண்டாமை - அண்டாமை - பாராமை முதலிய சமுதாயச் சீர்கேடுகளும் படிப்படியே பரவிப் பெருகலாயின. அத்தகைய பலம் பொருந்திய சாதிக் கோட்டையை தகர்த்தெறிய, இதுவே தக்க காலம்! இதுவே தக்க வாய்ப்பு!' என்று முழங்கினார்.

உண்மை வரலாறுகள்...

அந்த உண்மை வரலாறுகளையெல்லாம் திராவிடர்களுக்கு - தமிழர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில்தான் திராவிட இயக்க 100-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெறவுள்ளது. அந்த நிகழ்ச்சியில் நம்மைப்பற்றி புரிந்துகொள்ள - தெரிந்து கொள்ளத்தக்க பல விவரங்களை சான்றோர் பலர் விளக்கிட உள்ளார்கள். திராவிட இயக்க 100-ம் ஆண்டு விழாவினை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப் போகிறோமே, தொடக்க விழாவில் கலந்து கொள்ளாமல் விட்டால் என்ன என்று நினைத்து விடக்கூடாது. ஏனென்றால் இது நம் இன எழுச்சிக்கு எடுக்கும் விழா".

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+