லிப்ட்டில் ஓவர் கூட்டம்... மாட்டிக் கொண்ட எம்.எல்.ஏ.!
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள லிப்ட்டில் திமுதிமுவென ஆட்கள் அதிகமாக ஏறிக் கொண்டதால் லிப்ட் பாதியில் நின்றதால், எம்.எல்.ஏ உள்ளிட்டோர் மாட்டிக் கொண்டு அவதிப்பட்டனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் 10 மாடிகளுடன் நாமக்கல் கவிஞர் மாளிகை உள்ளது. இந்த கட்டடத்தில் அரசுத்துறை செயலாளர்கள் அலுவலகமும், பல்வேறு துறைகளின் பணியாளர்கள் அலுவலகங்களும் உள்ளன.
இந்த கட்டடத்தின் ஒருபகுதியில் அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை செயலாளர்கள் செல்வதற்காக தனியாக லிப்ட் ஒன்று உள்ளது. இந்த லிப்ட்டில் நேற்று இரவு 7 மணியளவில் ஒரு எம்.எல்.ஏ.வும், அவரது ஆதரவாளர்கள் 13 பேர் ஏறினார்கள்.
ஆட்கள் அதிக அளவில் இருந்ததால் லிப்ட் நகரவே சிரமப்பட்டு கிளம்பியது. இந்த நிலையில், 2-வது மற்றும் 3-வது தளத்துக்கு இடையே நடுவழியில் லிப்ட் நின்றுவிட்டது.
இதனால் உள்ளே இருந்தவர்கள் பீதியடைந்தனர். காப்பாற்றுங்கள் என்று உதவி கோரி அலறினர். இதனால் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரவு பணியில் இருந்த போலீஸ்காரர்களும், பொதுமக்களுக்கான லிப்ட்டில் உள்ள ஆப்பரேட்டரும் ஓடிவந்து மாட்டிக் கொண்டவர்களை மீட்க முயன்றனர்.
அதற்குள் லிப்ட் ஆபரேட்டரே எப்படியோ சிரமப்பட்டு கதவைத் திறந்து விட்டார். இதையடுத்து லிப்ட்டுக்குள் மாட்டிக் கொண்டவர்கள் எகிறிக் குதித்து வெளியே வந்து தப்பினர்.












Click it and Unblock the Notifications