புதுக்கோட்டைக்கு வேட்பாளரை அறிவித்த அதிமுக-விக்கித்துப் போய் நிற்கும் இந்திய கம்யூ.-என்ன முடிவோ?

புதுக்கோட்டை தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. முத்துக்குமரன் வெற்றி பெற்றார். தொகுதி மக்களிடம் தனது அயராத உழைப்பால் நல்ல பெயரை வாங்கியிருந்தார். சட்டசபையிலும் அனைத்துக் கட்சியினரையும் கவரும் வகையில் செயல்பட்டார்.
இந்த நிலையில் ஏப்ரல் 1ம் தேதி அவர் எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து தொகுதி காலியானது. இந்த நிலையில், அவர் இறந்து 11 நாட்கள் கூட ஆகாத நிலையில் புதுக்கோட்டைக்கு விசிட் அடித்த அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், புதுக்கோட்டையிலும் நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம். எங்களை எதிர்ப்போருக்கு சங்கரன்கோவில் கதிதான் நேரும் என்று பகிரங்கமாக அறிவித்தார்.
இதனால் தாங்களே மீண்டும் போட்டியிடலாம். அதிமுகவிடம் ஆதரவைப் பெறலாம் என்று நினைத்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து பேச அக்கட்சியினர் முடிவு செய்திருந்தனர்.
ஆனால் தற்போது அதிரடியாக மன்னர் வம்சத்தைச் சேர்ந்த கார்த்திக் தொண்டைமானை வேட்பாளராக அறிவித்துள்ளார் ஜெயலலிதா. கார்த்திக் தொண்டைமான் புதுக்கோட்டை நகராட்சித் தலைவராக உள்ளார். கட்சியில் பெரிய பொறுப்பில் இல்லாத அவர் தற்போது வேட்பாளராகியுள்ளார்.
இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரதிர்ச்சி நடந்துள்ளனர். வேட்பாளரை அதி்முக அறிவித்து விட்டதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கதவை இழுத்து மூடி விட்டார் ஜெயலலிதா என்பது தெளிவாகியுள்ளது.
இதனால் அவர்கள் தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு வருவார்களா அல்லது தேமுதிக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்று அதிமுகவுடன் பலப்பரீட்சை நடத்த முயல்வார்களா என்பது தெரியவில்லை.
ஆனால் தா.பாண்டியனுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையிலான நட்பை வைத்துப் பார்க்கும்போது பேசாமல் அவர் ஒதுங்கும் முடிவுக்கும் போகக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடுவது டைம் வேஸ்ட் என்று சொன்னவர்தான் தா.பாண்டியன் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications