கொல்லப்பட்ட 2 மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நஷ்டஈடு: இத்தாலிய கப்பல் நிறுவனம்
திருவனந்தபுரம்: கொல்லம் கடல் பகுதியில் சுட்டு கொல்லப்பட்ட 2 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்கியுள்ளதால் இத்தாலிய கடற்படை வீரர்கள் விடுதலையாக உள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இத்தாலிய சரக்கு கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குமரி மாவட்டம் நித்திரவிளையைச் சேர்ந்த அஜேஸ் பிங்கி, கொல்லத்தைச் சேர்ந்த ஜெலஸ்ட்டின் ஆகியோர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக இத்தாலிய கடற்படை வீரர்கள் மாசிமிலியானோ, ஜிரோனை கொல்லம் போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைத்தனர். கப்பலும் பறிமுதல் செய்யப்பட்டது.
பலியான 2 மீனவர்களின் குடும்பத்தினரும் மீன்படி படகின் உரிமையாளரும் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் காணப்பட்டது. அதன்படி கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடியும், படகு உரிமையாளருக்கு ரூ.17 லட்சமும் நஷ்ட ஈடு வழங்க இத்தாலி அரசு சம்மதித்தது. நஷ்ட ஈடு அளிப்பதால் இத்தாலிய வீரர்களுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெரும்படி நிபந்தனை விதித்தது. இதற்கு மீனவர்களின் குடும்பத்தினர் சம்மதித்தனர்.
இதையடுத்து கொச்சி லோக் அதலத் நீதிமன்றத்தில் இருதரப்பினருக்கும் இடையே நேற்று ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி அஜேஸ் பிங்கியின் இரண்டு சகோதரிகளிடமும், ஜெலஸ்ட்டினின் மனைவியிடமும் தலா ரூ.1 கோடிக்கான காசோலையை இத்தாலி அரசு அதிகாரிகள் கொடுத்தனர். இத்தாலி அரசுடன் ஏற்பட்ட ஒப்பந்ததின்படி இத்தாலிய கடற்படை வீரர்களுக்கு எதிராகவும், கப்பல் நிறுவனத்துக்கு எதிராகவும் தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெற அனுமதி கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மீனவர்களின் குடும்ப்த்தினர் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
வீரர்கள் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இத்தாலி அரசு தொடர்ந்த வழக்கு நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது துப்பாக்கிச்சூட்டில் இறந்த மீனவர்களுக்கு ரூ.1 கோடியும், படகு உரி்மையாளருக்கு ரூ.17 லட்சமும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இத்தாலிய வீரர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று இத்தாலி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications