காவிரி பிரச்சனை: கர்நடகத்துக்கு எதிரான தமிழக மனு மீது உடனடி விசாரணை இல்லை- உச்சநீதிமன்றம்

காவிரியில் கர்நாடகம் கூடுதல் நீரை பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீது கடந்த திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது.
நீதிபதிகள் டி.கே. ஜெயின், அனில் ஆர். தவே அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜரானார்.
"கோடை காலம் துவங்குவதற்கு முன்பாகவே கர்நாடகா அரசு கபினி அணை நீரை பயன்படுத்துகிறது. இதனால் தமிழகத்துக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இந்த ஆண்டு கர்நாடகம் ஏற்கனவே 29 டி.எம்.சி., தண்ணீரை பயன்படுத்தி விட்டது. மேலும் காவிரி நதியிலிருந்து கர்நாடக அரசு கூடுதல் நீரைத் தேக்கி வைக்க முயல்கிறது. அதைத் தடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும்" என்று வைத்தியநாதன் தமது வாதத்தின் போது தெரிவித்திருந்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் டி.கே. ஜெயின், அனில் ஆர். தவே ஆகியோர் இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தான் விசாரிக்க வேண்டும், வெள்ளிக்கிழமை இதே கோரிக்கையுடன் மீண்டும் அணுகினால் பரிசிலிக்கிறோம் என்றனர்.
இதைத் தொடர்ந்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் கோரிக்கையான உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.
இதனால் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை எப்போது நடைபெறும் என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications