டெங்கு காய்ச்சலால் இரண்டு சிறுமிகள் இறப்பு- பலி எண்ணிக்கை 14 ஆனது
நெல்லை: அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 சிறுமிகள் அடுத்தடுத்து இறந்தனர். இதை தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக இந்த காய்ச்சல் பாதிப்பால் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் வார்டில் உள்ள தனிப்பிரிவில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் முக்கூடல் அருகே உள்ள உடையாம்புளியை சேர்ந்த குமரேசன் மகள் சர்மிளா(4), நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. இதே போல் சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த குமார் மகள் சரண்யா (6) என்ற குழந்தையும் இறந்தது. இதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
அமைச்சர் செந்தூர் பாண்டியன், மேஜர் விஜிலா ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் அமைச்சர் கூறுகையில், தென்காசி, கடையம் பகுதியில் பரவி வந்த டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுக்குள் உள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications