நகராட்சித் தலைவி கணவருக்கும், கவுன்சிலர்களுக்கும் சண்டை.. வாய்ப்பேச்சு மற்றும் செருப்பு வீச்சு!
தென்காசி: தென்காசி நகராட்சித் தலைவியின் கணவருக்கும், நகராட்சிக் கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. பின்னர் இது செருப்பு வீச்சில் முடிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் தென்காசி நகராட்சியின் தலைவராக இருப்பவர் அதிமுகவைச் சேர்ந்த பானு. ஆனால் இவரை விட இவரது கணவர் ஷமீம்தான் அனைத்து வேலைகளிலும் தலையிட்டு வருவதாக கவுன்சிலர்கள் நீண்ட காலமாக புலம்பிக் கொண்டுள்ளனர். இதை எதிர்த்து போராட்டம் கூட நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், நகராட்சி அலுவலத்தில் கவுன்சிலர் சங்கர சுப்பரமணியன் என்பவர் தனது வார்டில் குடிநீர் பிரச்சினை பற்றி அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். அப்போது உறுப்பினர்கள் கருப்பசாமி, ரகமத்துல்லா முருகன் செய்யது ஆபில் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது அங்கு வந்த ஷமீம் கவுன்சிலர்களின் புகார் குறித்து கேட்டறிந்தார்.
இதைப் பார்த்த கவுன்சிலர் செய்யது ஆபில், தலைவியின் கணவர் எப்படி தலையிடலாம் என்று கூற இவர்களுக்குள் வாக்குவாதம் மூண்டது. இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். செருப்புகளும் சரமாரியாக வீசப்பட்டதாக தெரிகிறது.
இது குறித்து கவுன்சிலர் செய்யது ஆபில் தென்காசி காவல் நிலையத்தில் நகர் மனறத் தலைவியின் கணவர் ஷமீம் தன் மீது செருப்பைத் தூக்கி வீசி மிரட்டல் விடுத்ததாக புகார் செய்தார். தலைவியின் கணவர் தலையீட்டைக் கண்டித்து கவுன்சிலர்கள் முருகன், ரகமத்துல்லா உள்ளிட்டோர் நகராட்சி அலுவலகம் முன்னே தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அதேசமயம், ஆபில் தன்னைத் தரக்குறைவாக பேசியதாக ஷமீமும் போலீஸில் புகார் கொடுத்தார்.
இந்தப் பஞ்சாயத்தால் தென்காசி நகராட்சியில் பதட்டமும், பரபரப்பும் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications