கனிமவள மோசடி பணத்தை வைத்து 10 இந்திய பட்ஜெட்களை தயாரிக்கலாம்: கிருஷ்ணசாமி
திருச்சி: கடந்த 20 ஆண்டுகளில் நடந்த கனிமவள மோசடியின் மொத்த மதிப்பீட்டை வைத்து 10 ஆண்டுகளுக்கு நாட்டின் நிதிநிலை அறிக்கையை தயாரிக்க முடியும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் மொத்தம் 160 ஒன்றியங்களில் நிலத்தடி நீர் இல்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. அதனால் ஏற்கனவே உள்ள நீர் நிலைகளை பராமரித்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல், கிரானைட் உள்ளிட்ட கனிமவளங்கள் சுரண்டப்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் நடந்துள்ள கனிமவள மோசடியின் மொத்த மதிப்பீட்டை வைத்து 10 ஆண்டுகளுக்கு நாட்டின் நிதிநிலை அறிக்கையை தயாரிக்க முடியும்.
கிரானைட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நேர்மையான அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து ஒட்டு மொத்த முறைகேட்டையும் விசாரித்து முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்க வேண்டும். இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வரும் 17ம் தேதி புதிய தமிழகம் சார்பில் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் கல்லூரிகளில் படிக்கும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான முழுக்கல்வி கட்டணத்தை அரசு ரத்து செய்தது. மேலும் அந்த கட்டணத்தை அரசிடம் பெற்றுக்கொள்ளுமாறு கூறியும் பல கல்வி நிறுவனங்கள் அதை பின்பற்றவில்லை. இதற்காக மட்டும் நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு ரூ.118 கோடி ஒதுக்கியுள்ளது.
எனவே, தனியார் கல்லூரி நிர்வாகங்களை கண்டித்து வரும் 6ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள தனியார் கல்லூரிகள் முன்பு காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தொடர்ந்து 2 மணிநேரம் மறியல் போராட்டம் நடத்துகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications